ரூ.5 ஆயிரம் வழங்கிய திமுக அரசு; வீடு வீடாக பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

33

சென்னை: பிப்ரவரி 23ம் தேதி முதல் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக தொடங்கி, உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



அவரது அறிக்கை: திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' - 'விடியல் பயணம்' - 'தோழி விடுதிகள்' - 'புதுமை பெண் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர்.


பிப்ரவரி 23ம் தேதி முதல் வெல்லும் தமிழ்பெண்கள் பிரசாரத்தை வீடு வீடாக தொடங்கி, உலக மகளிர் தினமான மாரச் 8ம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும்.

பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான மத்திய பாஜ, அதிமுகவின் சூழ்ச்சிகளை முறியடித்து, ரூ.5 ஆயிரத்தை தமிழக பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும்.


அதுமட்டுமின்றி, 'திராவிடமாடல் 2.0' ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் பெண்களுக்கு உணர்த்திட வேண்டும்.


வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்து மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என பிரசாரத்தை சிறப்பாக அமைந்திட வேண்டும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் பிரசாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சியினர் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement