ஏஐ மாநாட்டில் சீன ரோபோ காட்சிபடுத்திய பல்கலைக்கு சிக்கல்


புதுடில்லி: டில்லியில் நடக்கும் ஏஐ மாநாட்டில் சீன தயாரிப்பான ரோபோ நாயை , நொய்டாவை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலையானது, காட்சிப்படுத்தியதால் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து அந்த மாநாட்டில் இருந்து வெளியேற பல்கலைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


டில்லியில் ஏஐ மாநாடு நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


இந்நிலையில் இந்த மாநாட்டில் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த அரங்கிற்கு வருபவர்களிடம் ரோபோ நாய் குறித்து பல்கலை பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியது. அதில் அந்த ரோபோ நாய் சீன தயாரிப்பு என்பது தெரியவந்ததால் கடும் விமர்சனத்தை எழுந்தது.


காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் திறமை மற்றும் தரவுகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏஐ மாநாடு ஒழுங்கற்ற முறையில் காட்சிப்படுத்தப்படுகிறது. சீன தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன என விமர்சனம் செய்தார்.


இதனையடுத்து, அந்த பல்கலையை ஏஐ மாநாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.


இது குறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலை, '' இந்த ரோபோ நாய் சீன ரோபோடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. முற்றிலும் கல்வி சார்ந்த பணிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது,'' எனக்கூறப்பட்டுள்ளது.

Advertisement