கல்லுாரி வேன்- - லாரி மோதல் மாணவி உட்பட 3 பேர் காயம்

திருவாடானை: தொண்டி அருகே கல்லுாரி வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவி உட்பட இரு டிரைவர்கள் காய மடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதுாரில் தனியார் மகளிர் கல்லுாரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரிக்குச் சொந்தமான வேன் தினசரி திருவாடானை, தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாணவிகளை ஏற்றி வருவது வழக்கம்.​வழக்கம் போல நேற்று காலை தொண்டியிலிருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் எஸ்.பி.பட்டினம் நோக்கி சென்றது.

வேனை பழயணக்கோட்டையை சேர்ந்த நாராயணன் 58, ஓட்டிச் சென்றார். காலை 8:30 மணிக்கு வேன் வட்டாணம் ஒத்தகடை அருகே சென்ற போது இறால் பண்ணைக்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற எதிரே வந்த லாரியும், கல்லுாரி வேனும் பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ​இந்த விபத்தில் கல்லுாரி வேனின் முன்பகுதி நொறுங்கியது.

லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த மாரிமுத்து 70, என்பது தெரிய வந்தது. விபத்தில் ​வேன் டிரைவர் நாராயணன் பலத்த காயமடைந்தார். லாரி டிரைவர் மாரிமுத்துக்கும் காயம் ஏற்பட்டது. கல்லுாரி ​வேனில் பயணம் செய்த பழையனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ரோஷினி 18,லேசான காயமடைந்தார். ​விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேன் டிரைவர் நாராயணன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ​விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement