ஈரானை அச்சுறுத்தும் அமெரிக்கா; 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்ததால் பதற்றம்

3

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுடன் பேச்சுவார்த்தையை துவங்கிய நிலையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் திடீரென 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை குவித்த அமெரிக்காவின் செயல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய கிழக்கு நாடான ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கு முரண்பாடு இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஈரான், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. இருநாடுகளிடையே ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


இந்த சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் எப்22, எப்35, எப்16 உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களை, ஈரான் அமைந்துள்ள மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்கா குவித்து வருகிறது. மேலும், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் டாங்கர்களும் அப்பகுதியில் ரோந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதுமட்டுமில்லாமல், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர்.போர்டு என்ற விமானம் தாங்கி கப்பல், கரீபியன் பகுதியிலிருந்து தற்போது மத்திய அட்லாண்டிக் பகுதியில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


யுஎஸ்எஸ் மஹான், யுஎஸ்எஸ் பெயின்பிரிட்ஜ் மற்றும் யுஎஸ்எஸ் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய மூன்று ஏவுகணை அழிப்புக் கப்பல்களுடன் இந்த போர்டு கப்பல் சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற கப்பல் உள்பட, அமெரிக்க வான் மற்றும் கடற்படைப் படைகள் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.


ஈரானுடனான பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் ராணுவ பலத்தை மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement