அநியாயமான அழுத்தம் தருகிறார்; டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் புகார்

5

ஜெனிவா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் நாட்டுக்கு அநியாயமான அழுத்தங்களை கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டிய நிலையில், அது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு தரப்பில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதி பேச்சுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.


போரை நிறுத்த அமெரிக்க மத்தியஸ்தம் செய்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடைபெற்ற இரு சுற்று பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்த மூன்றாவது சுற்று பேச்சு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது.


உக்ரைன், 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் இணைவதை கைவிட வேண்டும், ராணுவ அளவை கணிசமாக குறைக்க வேண்டும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நான்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும் என்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யா விரும்பும் சில பகுதிகளையும் விட்டு கொடுக்குமாறு நிர்ப்பந்தித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.


பேச்சுக்கு மத்தியில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: இது நியாயமான பேச்சாக இல்லை. ரஷ்யாவுடன் பணிந்து போக வேண்டும் என்ற வகையில் பேச்சு நடக்கிறது. டிரம்ப் தொடர்ந்து உக்ரைனை மட்டுமே சமரசம் செய்ய வலியுறுத்தி பொதுவெளியில் அழுத்தம் கொடுத்து வருகிறார்.


ஆனால், ரஷ்யாவின் மீது அதே அளவு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை. ரஷ்யா ஆக்ரமித்துள்ள பகுதிகளுக்கு அப்பால் எந்த பிரதேசத்தையும் விட்டுக் கொடுப்பது உக்ரைன் மக்களால் ஒருபோதும் மன்னிக்கப்படாது. அவர்கள் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement