காசா அமைதி வாரியத்தில் போப் சேர மாட்டார்: வாடிகன் அறிவிப்பு

வாடிகன் சிட்டி: அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான காசா அமைதி வாரியத்தில் சேர மாட்டோம் என வாடிகன் அறிவித்து உள்ளது.


மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் 2023 முதல் இரண்டாண்டுகளாக மோதல் நடந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியில் கடந்தாண்டு அக்டோபரில் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போருக்கு பிறகு காசாவை நிர்வகிக்க அதிபர் டிரம்ப், ஒரு அமைதி வாரியத்தை உருவாக்கினார். இவ்வாரியத்தின் தலைவராக அவரே செயல்படுகிறார்.


இந்த அமைப்பு, காசாவின் நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வாரியத்தில் இத்தாலி மற்றும் ஐரோப்பிய யூனியன் சேரவில்லை. பார்வையாளராக மட்டுமே அதன் பிரதிநிதிகளை அனுப்பி வருகிறது. இந்த வாரியத்தில் சேர போப் லியோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.


இது தொடர்பாக வாடிகன் நகரின் மூத்த அதிகாரியான கார்டினல் பீட்ரோ பரோலின் கூறியதாவது: அமைதி வாரியம் மற்ற அமைப்புகளை போன்று செயல்படுவது கிடையாது. அதன் குறிப்பிட்ட தன்மை காரணமாக அமைதி வாரியத்தில் போப் சேர மாட்டார். சர்வதேச அளவில் நெருக்கடி சூழ்நிலைகளை நிர்வகிக்கும் அமைப்பாக ஐநா இருக்க வேண்டும். இதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement