50 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும்: பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இலக்கு
திப்ருகர்: அசாம் சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 50 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும் என்று பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அசாமில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பூத் விஜய் அபியான் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யவும், ஒவ்வொரு வீட்டிலும் பாஜக கொடியை ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து பாஜ தேசிய தலைவர் நிதின் நபின், நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் 50 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 18) திப்ருகரில் கட்சி தொண்டர்களுடன் நிதின் நபின் பேசியதாவது:
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களை பெற வேண்டும்.
வெறும் வெற்றி மட்டும் போதாது, ஓட்டுச்சாவடி அளவில் வலுவான ஆதிக்கத்தை செலுத்த வேண்டும். கடந்த பிப்ரவரி 14 அன்று நடைபெற்ற பூத் விஜய் சங்கல்ப் சபா கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி 86,000 ஓட்டுச்சாவடி நிலை முகவர்களிடையே உரையாற்றினார்.
அதை தொடர்ந்து, முதல்வர் பூத் விஜய் அபியான் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அசாமில் உள்ள மொத்தம் 126 இடங்களில் 100 இடங்களைக் கைப்பற்ற பாஜ இலக்கு நிர்ணயித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி "ஓட்டு வங்கி அரசியலில்" ஈடுபடுகிறது, சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு எதிராக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.இவ்வாறு நிதின் நபின் பேசினார்.