'சீட்' கேட்டு டில்லி வர வேண்டாம் தமிழக பா.ஜ.,வினருக்கு எச்சரிக்கை
- நமது நிருபர் - 'எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கட்சி வளர்ச்சிக்கு பணியாற்றுவோருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். இதற்காக, மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசு கேட்டு டில்லிக்கு வரக்கூடாது' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, டில்லி மேலிடம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பலமாக இருப்பதால், பா.ஜ.,வில் போட்டியிட, 'சீட்' வாங்கி விட வேண்டும் என்று, பல நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர்.
கட்சியில் மாநில, மாவட்ட பதவிகளில் இருந்தாலும், கட்சி வளர்ச்சிக்கு களத்தில் இறங்கி பணியாற்றாமல் உள்ள சிலர், டில்லியில் உள்ள மேலிட தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆதரவு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் நல்ல நட்பில் உள்ளனர்.
இந்த செல்வாக்கை பயன்படுத்தி கட்சியில் பதவிகளை வாங்கிய அவர்கள், தற்போது அதே நட்பை பயன்படுத்தி சட்டசபை தேர்தலில் போட்டியிட, சீட் வாங்கி விடலாம் என்று அடிக்கடி டில்லி செல்கின்றனர்.
அவர்கள், தங்களுக்கு வேண்டிய மேலிட பிரதிநிதிகளிடம், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தெரிவித்து, அதை அ.தி.மு.க.,விடம் கட்டாயம் கேட்டு பெற வேண்டும் என்றும், தங்களை வேட்பாளராக அறிவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயல், தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த விபரம், அமித் ஷா வின் கவனத் திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து, 'கட்சி தலைமை முடிவெடுத்து, தகுதியான வேட்பாளர்களை அறிவிக்கும்.
'அதனால், சீட் கேட்டு, மத்திய அமைச்சர்கள், மேலிட தலைவர்களின் சிபாரிசுக்காக, யாரும் டில்லிக்கு வரக்கூடாது; அந்த நேரத்தை கட்சிக்காக செல விட வேண்டும்' என, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை டில்லி மேலிடம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்