நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
சென்னை: குஜராத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், நாமக்கல் அரசு பள்ளி மாணவியர் தயாரித்த, அன்னாசி பழம் அறுவடை கருவிக்கு, வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
பள்ளி மாணவர்களின் புதிய தொழில்நுட்ப உருவாக்கத்தை ஊக்குவிக்க, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறையின் கீழ் செயல்படும் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை நாத்துக்குளிப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி மாணவியர் உருவாக்கிய அன்னாசி அறுவடை கருவிக்கு முதல் பரிசு கிடைத்தது.
அந்த மாணவர்கள், குஜராத் மாநிலத்தில் இம்மாதம், 6ம் தேதி நடந்த ஐ.ஆர்.ஐ.எஸ்., எனப்படும் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான முன்முயற்சி போட்டியில் பங்கேற்றனர்.
இதில், நாமக்கல் நாத்துக்குளிப்பட்டி பள்ளி மாணவியரின் அன்னாசி பழ அறுவடை கருவி, தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. அவர்களுக்கு சென்னையில் நேற்று முன்தினம் அமைச்சர் அன்பரசன், பாராட்டி பரிசுகள் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து, மாணவியரின் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக இருந்த பள்ளி அறிவியல் ஆசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:
விவசாயிகள், அன்னாசி பழம் பறிக்கும்போது கைகளில் முள் குத்தியும், பூச்சிகள் மற்றும் பாம்புக் கடியாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ, அன்னாசி அறுவடை இயந்திரத்தை, 8ம் வகுப்பு மாணவியர் சத்தியா, வைசாலி குழுவினர் கண்டுபிடித்தனர்.
இது, தமிழக அரசின் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்திய மாநில அளவிலான போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டது. முதல் பரிசாக, அமைச்சர் அன்பரசன், 1 லட்சம் ரூபாய் வழங்கினார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடந்த போட்டியில், இது, அனைவரின் கவனத்தை ஈர்த்தது. இரண்டாம் பரிசாக வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா; டில்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு