துறைமுகம் - மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் யாரால் முடங்கியது? அமைச்சருடன் பழனிசாமி வாக்குவாதம்
சென்னை: துறைமுகம் -- மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் யாரால் முடங்கியது என கேள்வி கேட்டு, அமைச்சர் சுப்பிரமணியனுடன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - பழனிசாமி: ஒரு ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்களை, அடுத்து வரும் ஆட்சியில் தொடர்வது வழக்கம். அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான் அமையும்.
அப்போது, தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்டு நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவோம்.
அமைச்சர் சுப்பிரமணியன்: சென்னை துறைமுகம் -- மதுரவாயல் உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு, தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 25 சதவீத பணிகள் முடிந்திருந்தன. ஆனால், 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இத்திட்டத்தை நிறுத்தி விட்டனர்.
அதேபோல புதிய தலைமைச் செயலக கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றி விட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளை, தி.மு.க., அரசு கட்டி முடித்துள்ளது.
பழனிசாமி: துறைமுகம் -- மதுரவாயல் மேம்பால சாலை திட்டத்திற்கான துாண்கள், கூவம் ஆற்றின் நடுவில் அமைத்தால் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பதால், அத்திட்டத்தை மாற்றியமைக்க கோரினோம். திட்டத்தை நிறுத்தவில்லை.
அமைச்சர் சுப்பிரமணியன்: சிங்கப்பூர், துபாய், ஜப்பான் போன்ற நாடுகளில் கடலை துார்த்து துறைமுகம், நகரம் என, கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
எனவே, கூவம் ஆற்றின் நடுவே துாண்கள் அமைப்பதால், நீரோட்டம் பாதிக்கப்படும் என்பதை ஏற்க முடியாது.
முதலில், 1,050 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட திட்டத்தை, பணிகள் நடந்த அதே இடத்தில், 5,500 கோடி ரூபாயில், ஈரடுக்கு மேம்பால சாலை அமைக்கும் பணியை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. விரைவில் இப்பணி முடியும்.
கருணாநிதிக்கு பெயர் வந்து விடும் என்பதற்காக, இத்திட்டத்தை அ.தி.மு.க., அரசு நிறுத்தியது. இப்போது ஈரடுக்கு மேம்பால சாலை அமைத்த பெருமை, முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்க இருக்கிறது.
பழனிசாமி: கூவம் ஆற்றின் நடுவே துாண்கள் அமைத்தால், மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே, வடிவமைப்பை மாற்றச் சொன்னோம். இது மத்திய அரசின் திட்டம். பா.ஜ., அரசு எதுவும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறீர்கள்.
ஆனால், 5 கி.மீ., துாரத்திற்கு நீட்டித்து மேம்பால சாலையை, மத்திய பா.ஜ., அரசு அமைத்து வருகிறது. அ.தி.மு.க., அரசு கொடுத்த முன்மொழிவுகளின் அடிப்படையிலேயே, இந்த மேம்பால சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மேலும்
-
இனிவரும் ஆண்டுகளில் கோடைகால சிறப்பு நிதி: சட்டசபையில் தமிழக அரசு உறுதி
-
இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
-
நாளை திமுக மாசெ கூட்டம்
-
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு; பிப்ரவரி 21ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
நாமக்கல் பள்ளி மாணவியரின் அன்னாசி அறுவடை கருவிக்கு தேசிய போட்டியில் 2ம் இடம்
-
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்