சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் பற்றாக்குறை ரூ.1,602 கோடி; கடன் ரூ.2,000 கோடி

சென்னை: சென்னை மாநகராட்சி, வரும் நிதியாண்டுக்கு, 9,319 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதி பற்றாக்குறை 278 கோடி ரூபாயில் இருந்து ஒரே ஆண்டில், 1,602 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன் தொகை, 2,000 கோடி; அதற்காக வட்டி, ஆண்டுக்கு, 95 கோடி ரூபாய் செலுத்தப்படும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. பாலம், கட்டடம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

---சென்னை மாநகராட்சியின், 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. நிதிநிலை அறிக்கையை, நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

அதில், சென்னை மாநகராட்சியின் மொத்த வரவு, 7,717 கோடி ரூபாயாகவும், செலவினம், 9,319 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,602 கோடி ரூபாய் வரை நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2025 - 26ம் நிதியாண்டில், 378 கோடி ரூபாயாக இருந்த நிதி பற்றாக்குறை, இந்தாண்டு நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, வரும் நிதியாண்டில், பள்ளிகள், இறைச்சி கூடங்கள், மயான பூமிகள் மேம்பாடு, அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட, 2,145.47 கோடி ரூபாய்க்கு பல்வேறு பணிகள் செய்வதால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சென்னை மாநகராட்சி, உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்டவற்றின் வாயிலாக இதுவரை, 2,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 95.20 கோடி ரூபாயை வட்டியாக மாநகராட்சி செலுத்துகிறது.

இதனால், இந்தாண்டுக்கான பட்ஜெட்டில், பாலங்கள், கட்டடம், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement