'தனித்தனி விடுதிகளுக்கு தனியாக பதிவு வேண்டும்'

பொள்ளாச்சி: பள்ளி, கல்லுாரிகளில், விடுதிகள் தனித்தனி இடங்களில் இருப்பின், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவும் தனியாக வைத்திருக்க வேண்டும் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரி விடுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறுகையில், ''பள்ளி, கல்லுாரிகள் எதுவானாலும் விடுதிகளுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு அவசியம். ஒரே வளாகத்திற்குள் மாணவர்கள், மாணவியர் விடுதி அமைந்து இருப்பின் ஒரு பதிவு போதும்.

வெவ்வேறு இடங்களில் இருப்பின் தனித்தனி பதிவு வேண்டும். உணவு கையாள்வது எனில் தண்ணீர் உட்பட அனைத்து வகை உணவு தயாரிப்பு, வாங்கி விற்பனை செய்வது, விற்பனை, வினியோகம், பரிமாறுதல், வியாபாரம் என அனைத்தும் பொருந்தும்.

தனியார் கல்லுாரியில் விடுதிகளுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு இல்லாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கல்லுாரிக்கு வெளியே இருந்த மாணவியர் விடுதிக்கு பதிவு இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement