மக்கள் மனசு: நாட்டின் நலனுக்காக வீட்டுக்கு 3 பிள்ளை

8

நாட்டின் நலனுக்காக ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். இது பற்றி கோவை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

பணத்துக்கு எங்கே போக?



நமது முன்னோர் ஏழெட்டு குழந்தை பெற்று வளர்த்தனர். காலப்போக்கில் குடும்பம் சுருங்கிவிட்டது. தாத்தா, பாட்டி அரவணைப்பு போய் இன்று பணிப்பெண்ணிடம் குழந்தை வளர்கிறது. சமூகம் செழிக்க குடும்பத்துக்கு 3 குழந்தை நல்லது தான். ஆனால், அவற்றை வளர்க்க பணத்துக்கு எங்கே போவது? -கண்ணன், மலுமிச்சம்பட்டி


மிடில் கிளாஸ் தயங்க கூடாது



பாரத தேசம் மேலும் சிதையாமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்து வீட்டிலும் மூன்று வாரிசுகள் இருப்பது அவசியம். தனவந்தர்கள், ஏழைகள் என்று இரு தரப்பினர் வீடுகளிலும் வாரிசுகள் அதிகமாக இருப்பதை பார்க்கலாம். நடுத்தர வர்க்கம் தான் சங்கோஜ படுகின்றனர். அது மாற வேண்டும். மாலா சுந்தர், சீனிவாசநகர்.

நல்ல விஷயம்



மனித ஆற்றல் மகத்தானது. அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை. நாட்டில் இயற்கை வளம் கொட்டி கிடக்கிறது. அதற்கு ஏற்ப மனிதவளம் தேவை. அதைத்தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லி இருக்கிறார். முன்பு ஒரு குழந்தையோடு நிறுத்த சொன்னார்கள். பிறகு 2 போதும் என்றனர். இப்போது 3 தேவை என்கிறார் இவர். நல்ல விஷயம். வரவேற்கிறேன். லதா, கவுண்டம்பாளையம்

எத்தனை பேரால் முடியும்?



எனக்கு 3 குழந்தைகள். உடன்பிறந்தவர்கள் என்றாலும் 3 குழந்தைகளும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பல விஷயங்களில் சமரசம் செய்தோம். 2 குழந்தைகளை நல்லபடி வளர்ப்பதற்கே நிதி பலம் அவசியப்படுகிறது. எத்தனை பேரால் முடியும்? - ஜெயலட்சுமி, டி.வி.எஸ். நகர்

மூதாதையரை மறக்கலாமா?



40 ஆண்டுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் பெண், ஆண் என 4 குழந்தையாவது இருந்தன. சிரமம் பார்க்காமல் வளர்த்ததால் அவர்கள் இன்று பெரிய அதிகாரி, அரசியல் தலைவர், விஞ்ஞானி என நல்ல நிலையில் இருக்கின்றனர். அந்த மூதாதையரை நாம் முன் உதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். - பிரேமா, திப்பனுார்


வீடும் நாடும் விளங்கும்



ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் இருந்தால் அடுத்த தலைமுறை நீண்ட சந்ததியாக இருக்கும். வம்சம் தொடர்வதில் தடை இருக்காது. இதைத்தான் முன்னோர் வலியுறுத்தினர். இப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார். அனைவரும் அதை பின்பற்றினால்வீடும் நாடும் நன்றாக இருக்கும்.- கண்ணகி ராதாகிருஷ்ணன், விஸ்வநாதபுரம்


ஒன்று வளர்ப்பதே சிரமம்



எல்.கே.ஜி. படிக்கும் என் குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் ஃபீஸ் கட்டுகிறோம். வீட்டு வாடகை, குடும்ப செலவு, மருத்துவ செலவு என அனைத்தையும் சேர்த்தால், என் மாத வருமானம் போதவில்லை. மனைவியும் வேலைக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு குழந்தை வளர்ப்பதே சிரமம். 3 எல்லாம் நினைக்கவே முடியாது. - நாகராஜ், பெரியநாயக்கன்பாளையம்

சமநிலை சாத்தியம் இல்லை



ஒன்று, இரண்டு குழந்தைகளை வளர்க்கவே பெற்றோர் திணறுகின்றனர். தரமான கல்வியும், நம்பகமான மருத்துவமும் மலிவாக கிடைப்பதில்லை. கல்வி பெறுவதிலேயே சமநிலை இல்லை. இதில் சமூக சமநிலை எப்படி சாத்தியம்? குழந்தை பெறுவது அவரவர் விருப்பம். அதில் பிறர் யோசனை கூற தேவையில்லை. -சசி, ரத்தினபுரி

Advertisement