ரூ.1,300 கோடி பாக்கி இருந்தும் மாநகராட்சி அசரவில்லை; 600 பணிகளுக்கு 'ஜெட்' வேகத்தில் டெண்டர்

13

நமது நிருபர்



சென்னை மாநகராட்சியில், பல்வேறு பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பாக்கி வைத்துள்ள நிலையில், 1,200 கோடி ரூபாயில் புதிதாக, 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, அசராமல் மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. செலவழிக்கும் தொகை எப்போது வருமோ என, ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


சென்னையில் அடிப்படை கட்டமைப்புகளை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. மழைக் காலங்களில், வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்பு, சாலை, கல்வி, மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை, மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் வாயிலாகவே செய்யப்பட்டு வருகிறது.


ஓராண்டாக, மாநகராட்சியில் பல்வேறு பணிகளை செய்த, 100க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிதி விடுவிக்காமல் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஒப்பந்ததாரர்கள் எப்போது பணம் கிடைக்கும் என, காத்துக் கிடக்கின்றனர்.

அச்சம்



அதேநேரம், சட்டசபை தேர்தல் வர இருப்பதால், முன்கூட்டியே அனைத்து பணிகளுக்கான டெண்டரை, மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. தினசரி, 40க்கும் மேற்பட்ட டெண்டர் கோரப்பட்டு வரும் நிலையில், 19 நாட்களில், 600க்கும் மேற்பட்ட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.

ஏற்கனவே செய்த பணிகளுக்கான பாக்கி தொகையை விடுவிக்காத நிலையில், தற்போது அறிவிக்கப்படும் டெண்டர் பணியை எடுத்தால், தேர்தலுக்கு பின், எப்போது நிதி விடுவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.

தவிப்பு



இது குறித்து, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சென்னையில், அவசரகால பணிகள் என்ற பெயரில், டெண்டர் பணிகளை எடுத்து செய்கிறோம். வெளியே, வட்டிக்கு கடன் வாங்கிதான், அப்பணியை செய்ய முடிகிறது. ஆனால், பணி முடிந்து ஐந்து மாதங்களுக்கு மேலான திட்டத்திற்கும் நிதி விடுவிக்காமல், மாநகராட்சி காலம் தாழ்த்தி வருகிறது. சில பணிகளுக்கு ஓராண்டாகியும் பணம் வரவில்லை. தற்போது தேர்தலுக்கு முன், 600க்கும் மேற்பட்ட பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.


1,200 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள இப்பணிகளை எடுத்து செய்தாலும், எப்போது நிதி விடுவிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு டெண்டர் பணிகளுக்கு ஏற்ப, 15 சதவீதம் வரை கமிஷன் வழங்கி வருகிறோம். இந்த ஒப்பந்தத்தை எடுத்து பணி செய்த பின், ஆட்சி மாறினால், அந்த ஆட்சியாளர்களுக்கும் கமிஷன் கொடுத்தால் தான், நாங்கள் பணியாற்றியதற்கான நிதியை பெற முடியும். இல்லையென்றால், நிதி விடுவிக்க கால தாமதத்தை ஏற்படுத்துவர். இதுகுறித்து, யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_P@

ஆட்சியாளர்களின் அழுத்தமே காரணம்

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்தாலும், வருவாய் வரவை விட, செலவினம் அதிகமாக உள்ளது. வரும் நிதியாண்டில், 1,602 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. அதேபோல், 2,000 கோடி ரூபாய் மாநகராட்சிக்கு கடன் உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 95 கோடி ரூபாய் வரை வட்டி செலுத்தப்படுகிறது.


இதற்கிடையே, பல்வேறு பணிகளை செய்து, பல மாதங்களாக நிதி பெறாமல் ஒப்பந்ததாரர்களும் காத்திருக்கின்றனர். மத்திய, மாநில அரசு நிதி மானியத்தை விடுவிக்காமல் உள்ளது. அதனால், குறைந்த கால அளவிற்குள், அதிகளவிலான டெண்டரை கோர வேண்டாம் என, மாநகராட்சியை எச்சரித்தோம்.


ஆனால், ஆட்சியாளர்களின் அழுத்தம் காரணமாக, உயர் அதிகாரிகளும், நிதி பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல், அனைத்து பணிகளுக்கும் வேகவேகமாக டெண்டர் கோரி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.block_P

Advertisement