வயல்களில் ஆட்டு கிடைக்கு பயன்படும் செம்மறி ஆடுகள்
திருவாடானை: திருவாடானை சுற்றுவட்டார கிராமங்களில் வயல்களில் ஆட்டு கிடைக்காக வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகள் வந்துள்ளன.
திருவாடானை தாலுகாவில் நுாற்றுக்கணக்கான கிராமங்களில் தற்போது நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடக்கிறது. அறுவடை முடிந்து நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலங்களில் அடுத்த போகத்திற்கு நிலத்தைத் தயார் செய்ய ஆட்டுக்கிடை போடுவது இங்கு காலம் காலமாகத் தொன்று தொட்டு வரும் பழக்கம். சாதாரண ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் நிலத்தின் தன்மை கெடுவதோடு, செலவும் அதிகமாகிறது.
ஆனால் ஆட்டுக்கிடை அமைப்பதன் மூலம் ஆடுகளின் புழுக்கை மற்றும் சிறுநீர் நேரடியாக நிலத்தில் விழுவதால், மண்ணுக்குத் தேவையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவை இயற்கையாகவே கிடைக்கின்றன. ஆடுகள் நிலத்தில் நடமாடுவதால் தேவையற்ற களைச் செடிகள் மிதிக்கப்பட்டு அழிகின்றன. இந்த முறையில் உரமிடப்பட்ட நிலங்களில் விளையும் பயிர்கள் அதிக தண்டு வலிமையுடன், நோய் எதிர்ப்புத் திறனுடன் வளர்கின்றன.
புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகளுடன் கிடை போடும் தொழிலாளர்கள் திருவாடானை பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஒரு இரவு கிடை போட ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை ஆட்டுக்காரர்களுக்கு கட்டணமாக வழங்கப்படுகிறது. சில நேரங்களில் ஆட்டுக்காரர்களுக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்களையும் விவசாயிகளே வழங்குகின்றனர்.
நுாற்றுக்கணக்கான ஆடுகளை ஒரே இடத்தில் அடைத்து வைத்து, இரவு முழுவதும் ஆட்டுக்காரர்கள் திறந்த வெளியிலேயே தங்கி காவல் காக்கின்றனர். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு ஆட்டுக்கிடைக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
-
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்