முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் மயக்கம்

4


சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று முன்தினம் முதல், காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சென்ற, வி.சி., தலைவர் திருமாவளவன், காரிலிருந்து இறங்கி, அவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பட்டதாரி ஆசிரியர்கள்



கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரதமிருந்தனர்.

கிராம உதவியாளர்கள்



தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், 500க்கும் அதிகமான பணியாளர்கள், நுாதன முறையில், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

அதேபோல், தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முதல், தமிழகம் முழுதும் உள்ள, கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில், கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள்



தமிழ்நாடு மின் வாரியம் நிறுவனத்தில், 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும், ஒப்பந்த ஊழியர்களுக்கு, பணி நிரந்தரம் வழங்கக் கோரி, சென்னை கோயம்பேடில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநில தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் உள்ள, அம்பேத்கர் சிலை முன்பு, நேற்று காலை திரண்ட ஊழியர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.சிலர் கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள, 50 அடி உயர மேம்பாலம் மற்றும் மின்விளக்கு கம்பம் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டனர் .



பின், போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்ற மூன்று பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ரேஷன் ஊழியர்கள்



பொது வினியோக திட்டத்திற்கு, தனித்துறை உருவாக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில், அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

போராட்டம் 'வாபஸ்'



அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி செயலர்கள் போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. அரசு விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, தற்செயல் விடுப்பு போராட்டத்தை கைவிடுவதாக, சார் - பதிவாளர்கள் சங்கம் அறிவித்தது.

Advertisement