வழக்கறிஞருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஆதாரம் கோரும் உயர்நீதிமன்றம்

6

மதுரை: வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து எடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், போதிய ஆதாரங்களை அந்நீதிமன்ற பதிவாளர் தாக்கல் செய்ய இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.


தஞ்சாவூர் தமிழ் பல்கலையில் இணை பேராசிரியராக பழனிவேலு நியமிக்கப்பட்டார். அவருக்கு போதிய தகுதிகள் இல்லை; நியமனம் சட்டவிரோதமானது. அதை ரத்து செய்து அப்பணியிடத்தில் தன்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை வெற்றிச்செல்வன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி,'தேர்வுக் குழு பரிசீலித்து பழனிவேலுவை நியமித்துள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என 2022 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து வெற்றிச்செல்வன் மேல்முறையீடு செய்தார்.



2025 ஜூலை 24 ல் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் எங்களில் ஒருவரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது கடமைகளை நிறைவேற்றும்போது ஜாதி, சமூக பாகுபாடு காட்டுகிறார் என அவதுாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இவ்வழக்கில் எதிர்மனுதாரரான பழனிவேலு சார்பில் ஆஜராகி வாதிட வாஞ்சிநாதன் வக்காலத்து தாக்கல் செய்திருந்தார். அவர் ஆஜராகி,'பழனிவேலுவிற்காக ஆஜராகும் வழக்கறிஞர் நானல்ல. அவருக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பிவிட்டேன்,' என்றார்.


வாஞ்சிநாதன் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்கிறார். அவரது செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அவர் ஜூலை 28ல் ஆஜராகி நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

2025 ஜூலை 28ல் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்தது. வாஞ்சிநாதன் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுவரை நாங்கள் வாஞ்சிநாதனுக்கு எதிராக எந்த அவமதிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வில்லை. அவர் சுவாமிநாதனை அவதுாறாக பேசி வருகிறார் என்பது சர்ச்சைக்கு அப்பாற்பட்டது.



வாஞ்சிநாதன் முன்னிலையில், அவரது நேர்காணல்களில் ஒன்றான 'ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாதி பாசம்,' என்ற தலைப்பிலான வீடியோ பதிவு நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வின் நடவடிக்கைகளைப் பற்றி வாஞ்சிநாதன் குறிப்பிடுகையில், 'அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஒரு பிராமணர் என்பதால் காப்பாற்றப்பட்டார்.


மூத்த வழக்கறிஞர் வில்சன் பிராமணர் அல்ல என்பதால் குறிவைக்கப்பட்டார்,' என குறிப்பிட்டுள்ளார். அதே நேர்காணலில், மத சார்பு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்த நேர்காணல் ஒரு உதாரணம் மட்டுமே. சமூக ஊடகங்களில் வாஞ்சிநாதன் மேற்கொண்ட இத்தகைய அவதுாறான பிரசாரத்தின் காரணமாகவே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


வாஞ்சிநாதன் தனது மனதை மாற்றிக்கொண்டால் இவ்வழக்கை முடித்து வைப்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. வாஞ்சிநாதனுக்கு அப்படிப்பட்ட எந்த நோக்கமும் இல்லை. அவர் தொடர்ந்து நீதித்துறையை அவதுாறு செய்து வருகிறார். வாஞ்சிநாதன், 'இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க முடியும்,' என பதில் மனு சமர்ப்பித்துள்ளார்.


இதில் எங்களுக்கு சந்தேகம் இல்லை. ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு மாற்றுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம். தலைமை நீதிபதி தகுந்த நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தலைமை நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி வாஞ்சிநாதனுக்கு தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க, அவமதிப்பு மனுவை உயர்நீதிமன்றக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்தார்.



இதை நேற்று தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: வாஞ்சிநாதன் அவதுாறாக பேசினார் என்பதற்கு போதிய ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. போதிய ஆதாரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து மனுதாரர் தரப்பில் மார்ச் 2ல் தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement