ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழு நம்பிக்கை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்


புதுடில்லி: " புதிய ஏஐ., பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகநாடுகள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது," என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதத்துடன் கூறினார்.
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாடு ஐந்து நாட்களாக நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

"புதிய ஏஐ யுகத்தில் இந்தியாவின் பங்களிப்பு மீது உலகம் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளது,

இந்த மாநாட்டின் மூலம் ஏஐ உள்கட்டமைப்பிற்காக ரூ.21 லட்சம் கோடி, ஆழமான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்காக 20 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளது.
இந்தியா தனது ஏஐ பயணத்தின் அடுத்த கட்டமான "AI மிஷன் 2.0" நோக்கி நகர்கிறது. இது மேம்பட்ட இறையாண்மை மாதிரிகள் மற்றும் பாதுகாப்பான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தும்.


ஏஐ என்பது ஒரு சிலரின் கைகளில் மட்டும் இருக்கக் கூடாது. இது "மக்களுக்காக, மக்களால், மக்களின்" தொழில்நுட்பமாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் பார்வை.ஏஐ தொழில்நுட்பம் வேலைகளைப் பறிக்காது, மாறாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.இதற்காக 500 பல்கலைக்கழகங்களில் உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.


டீப்பேக் போன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்க தொழில்நுட்ப ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

இந்த 5 நாள் மாநாட்டை 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர், இது இந்தியாவின் தொழில்நுட்ப வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.

இந்த மாநாட்டில் 86 நாடுகள் மற்றும் இரண்டு சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து 'ஏஐ உச்சி மாநாட்டுப் பிரகடனத்தில்' கையெழுத்திட்டுள்ளன.
இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

Advertisement