ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உலகை ஆளப்போகும் இந்தியா; பிரதமர் முன்வைத்த பிரகடனத்தில் 86 நாடுகள் கையெழுத்து

2

புதுடில்லி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக நம் நாடு உருவெடுத்துள்ளது. மாநாட்டின் முடிவில், பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான கொள்கைகளை ஏற்று, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உட்பட 86 நாடுகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன.


டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் ஐந்து நாள் சர்வதேச ஏ.ஐ., தாக்க உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி, நடந்தது. மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். இதில், பிரேசில், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், 'கூகுள்' தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, 'ஓபன் ஏ. ஐ.,'யின் சாம் ஆல்ட்மேன், 'மைக்ரோசாப்ட்' தலைவர் பிராட் ஸ்மித் உட்பட சர்வதேச அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மகிழ்ச்சி




இந்நிலையில், ஏ.ஐ., தாக்க மாநாடு மற்றும் கண்காட்சி குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று கூறியதாவது:
'அனைவருக்கும் நலம்; அனைவருக்கும் மகிழ்ச்சி' என்ற கொள்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. குறிப்பாக பிரதமர் மோடி முன்வைத்த மனிதநேய அடிப்படையிலான ஏ.ஐ., தொலைநோக்கு கொள்கையை, உலக நாடுகள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும். அனைவருக்கும் அந்த வசதி, சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் சென்று சேர வேண்டும்.
குறிப்பாக, சமூகத்தில் உள்ள கடைசி மனிதன் வரை ஏ.ஐ., தொழில்நுட்பம் சென்று சேர வேண்டும். இதற்காக இம்மாநாட்டில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.
பொருளாதார வளர்ச்சியுடன், சமூக நலனுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையே பிரதானம்.


எனவே, பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தர உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இம்மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, டென்மார்க், எகிப்து, இந்தோனேஷியா, ஜெர்மனி என ஒவ்வொரு நாடும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் நாம் முன் வைத்த விவகாரங்களுக்கு முக்கியத்துவம் தர உறுதி அளித்துள்ளன.

நம்பிக்கை



ஏ.ஐ., தாக்க உச்சி மாநாட்டில் கொண்டு வந்த பிரகடனத்தில், 86 நாடுகள், இரண்டு சர்வதேச அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.
பிரமாண்டமாக நடந்த ஏ.ஐ., தாக்க உச்சி மாநாட்டின் மூலம் உள்கட்டமைப்பு துறையில் மட்டும் 22.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீ டுகள் குவிந்துள்ளன.

மேலும், புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் அதிநவீன, 'டீப் டெக்' ஆராய்ச்சிக்காக, 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்ய சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இது நமக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

ஏ.ஐ., கண்காட்சியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். சர்வதேச நாடுகளில் இருந்து வந்திருந்த வல்லுநர்களிடம் கலந்துரையாடி, ஏ.ஐ., தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக் கொண்டனர்.
மொத்தத்தில் இந்தியாவின் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மீது, உலக நாடுகள் வைத்திருக்கும் நம் பிக்கை இம்மாநாட்டில் பிரதிபலித்தது.

னஇவ்வாறு அவர் கூறினார்.

Advertisement