இந்திய பெண்கள் அணி அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
அடிலெய்டு: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. அடிலெய்டில் 3வது போட்டி நடந்தது.
ஸ்மிருதி அபாரம்: 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்திய அணிக்கு ஷைபாலி வர்மா (7) ஏமாற்றினார். பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி நம்பிக்கை தந்தது. டார்சி பிரவுன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மிருதி, 38 பந்தில் அரைசதம் கடந்தார். இது, சர்வதேச 'டி-20' அரங்கில் இவரது 33வது அரைசதம். இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்த போது ஸ்மிருதி (82 ரன், 55 பந்து, 3X6, 8X4) அவுட்டானார். ரிச்சா கோஷ் (18) நிலைக்கவில்லை. ஜெமிமா 59 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (2) அவுட்டாகாமல் இருந்தார்.
சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜார்ஜியா (10), பெத் மூனே (6), எல்லிஸ் பெர்ரி (1) ஏமாற்றினர். லிட்ச்பீல்டு (26) ஆறுதல் தந்தார். ஜார்ஜியா வேர்ஹாம் (12), அனாபெல் (14) சோபிக்கவில்லை. ஆஷ்லே கார்ட்னர் (57) அரைசதம் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 159 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீ சரணி தலா 3, அருந்ததி ரெட்டி 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி மந்தனா வென்றார்.
10 ஆண்டுகளுக்கு பின்...
இந்திய பெண்கள் அணி, 10 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 'டி-20' தொடரை கைப்பற்றியது. இதற்கு முன், 2016ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை, மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2-1 என வென்றிருந்தது.
சூப்பர் ஜோடி
பெண்களுக்கான சர்வதேச 'டி-20' அரங்கில், 2வது விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த இந்திய ஜோடி வரிசையில் ஸ்மிருதி-ஜெமிமா ஜோடி (121 ரன்) முதலிடம் பிடித்தது. இதற்கு முன், மிதாலி - பூனம் ராத் ஜோடி 98 ரன் (எதிர்: வங்கம், 2014) சேர்த்திருந்தது.
ஜெமிமா '2500'
சர்வதேச 'டி-20' அரங்கில் 2500 ரன்னை எட்டிய 4வது இந்திய வீராங்கனையானார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதுவரை 118 போட்டியில், 2551 ரன் (15 அரைசதம்) எடுத்துள்ளார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (4231 ரன், 160 போட்டி), ஹர்மன்பிரீத் கவுர் (3822 ரன், 190 போட்டி), ஷைபாலி வர்மா (2519 ரன், 98 போட்டி) இம்மைல்கல்லை எட்டினர்.
மேலும்
-
விருதுநகரில் தேர்தலுக்காக அவசர கதியில் அமைக்கும் தரமற்ற ரோடுகள் மக்களின் வரிப்பணம் வீண்
-
மாவட்டத்தில் ரூ.5,000 கோடியில் வளர்ச்சி திட்டம் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்
-
சிவகாசியில் போதையில் டூவீலரை நடுரோட்டில் போட்டு குடிமகன் அட்டகாசம்
-
பா.ஜ., ஆர்ப்பாட்டம்
-
திருமண விழா
-
சைபர் குற்றங்கள் மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்தன; 2025ல் மக்கள் இழந்த பணம் 644 கோடியாக சரிவு