ஒரு ஜோடி டயருக்கு ரீட்ரெடிங் கட்டணம் ரூ.1,500 உயர்த்த முடிவு

நாமக்கல்: மூலப்பொருட்கள் விலை உயர்வால், டயர் ரீட்ரெடிங் செய்வதற்கு ஒரு ஜோடி டயருக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

டயர் ரீட்ரெடிங் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது.

அதில், மத்திய அரசின் அதிக எடை ஏற்ற அனுமதி மற்றும் லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்னைகள், லாரிகளுக்கு சரியான லோடு கிடைக்காத சூழ்நிலை, இதுபோன்ற காரணங்களால் கனரக போக்குவரத்து மந்தமான நிலையில், டயர் ரீட்ரெடிங் வரத்து வெகுவாக குறைந்திருப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், ரப்பர் நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதனால், ரீட்ரெடிங் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவற்றை கருத்தில் கொண்டு, ரீட்ரெடிங் கட்டணம் ஒரு ஜோடி டயருக்கு, 1,000ல் இருந்து, 1,500 ரூபாய் வரை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களில் டயரின் கட்டமைப்பு வலுவாக இருந்து மேற்புறம் மட்டும் சேதமடைந்தால், அதை அகற்றி புதிதாக ஒட்டுவது ரீட்ரெடிங் எனப்படுகிறது.

இது புதிய டயர் வாங்குவதைவிட 30 முதல் 50 சதவீதம் வரை செலவை குறைப்பதாக கூறப்படு கிறது.

Advertisement