சைபர் குற்றங்கள் மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்தன; 2025ல் மக்கள் இழந்த பணம் 644 கோடியாக சரிவு

3

நமது சிறப்பு நிருபர்



நாடு முழுதும், டிஜிட்டல் கைது மோசடி உள்ளிட்ட சைபர் குற்ற சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பணத்தை இழப்பது கடந்த 2024ல் உச்சத்தை எட்டிய நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக சரிந்துள்ளது. சைபர் குற்ற வழக்குகள் எண்ணிக்கை, 2025ல் 17,264 ஆகவும், மக்கள் இழந்த பணம் 644 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


'டிஜிட்டல்' பண பரிவர்த்தனைகள் மற்றும் 'ஆன்லைன்' சேவைகள் நம் நாட்டில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், 'சைபர்' குற்றங்களும் கடந்த சில ஆண்டுகளில் தேசிய அளவில் கவலைக்குரிய பிரச்னையாக மாறின. குறிப்பாக, 'மொபைல் போன்' வாயிலாக அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.



பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி, சம்பந்தப்பட்டவர்களை, 'டிஜிட்டல் கைது' செய்வதாக மிரட்டுவது அதிகரித்தது. அந்த விசாரணை முடியும் வரை, அவர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கிக் கணக்கிற்கு மாற்றும்படி கூறி, பல கோடி ரூபாய் பணம் அபகரிக்கப்பட்டது.

விழிப்புணர்வு



இந்த டிஜிட்டல் கைது மோசடியில் மட்டும், கடந்த 2022ல் 91 கோடி ரூபாயை மக்கள் இழந்தனர்; 39,925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து மக்கள் இழந்த பணம், 2023ல் 272 சதவீதம் உயர்ந்து 339 கோடி ரூபாய் ஆனது. 2024ல் நிலைமை மோசமடைந்து, 1,918 கோடி ரூபாய் இழந்திருந்தனர்; 1.23 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



இதையடுத்து, டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து பொது மக்களுக்கு எஸ்.எம்.எஸ்., மொபைல் போன் 'காலர் ட்யூன்', விளம்பரங்கள் மற்றும் பிரதமரின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி ஆகியவை மூலம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பலனாக கடந்த 2025ல் சைபர் குற்ற வழக்குகள் எண்ணிக்கை 17,264 ஆகவும், மக்கள் இழந்த பணம் 644 கோடியாகவும் குறைந்துள்ளது.


சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய உள்துறை அமைச்சகம் முன்னிலை வகித்து வருகிறது. இந்த அமைச்சகத்தின் கீழ், 'ஐ4சி' எனப்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் 2019ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, மத்திய மற்றும் மாநில போலீசார், புலனாய்வு அமைப்புகள், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கும் மையமாக செயல்படுகிறது.


சைபர் மோசடி புகார்களை உடனடியாக பதிவு செய்ய, உதவி எண் 1930 மற்றும் 'ஐ4சி' இணைய தளம் இயங்குகின்றன. தற்போதைய நிலவரப்படி, தனியார், அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள், நிதி சார்ந்த தொழில் நுட்ப நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக தளங்கள் உள்ளிட்ட 795 நிறுவனங்கள், 'ஐ4சி' உடன் இணைக்கப் பட்டுள்ளன.

நடவடிக்கை



இந்த அமைப்பு மூலம், 21.65 லட்சம் சந்தேக நபர்களின் விபரங்கள் பகிரப்பட்டு, 9,055 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 'சைபர் குற் றங்களை கையாள்வது மற்றும் மோசடி கும்பல்களை அழிப்பது' என்ற தலைப்பில், டில்லியில் இரண்டு நாள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:



முன்னர், சைபர் குற்றங்களில் தனிநபர்கள் ஈடுபட்டனர். தற்போது இந்த குற்ற சம்பவங்கள் நிறுவனமயமாக மாறியுள்ளன. குற்றவாளிகள் மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்களது செயல்முறைகளை தொடர்ந்து மாற்றி வருகின்றனர். இதனால், சைபர் குற்றங்களை எதிர்கொள்வது ஒரே ஒரு அமைப்பின் பொறுப்பு அல்ல.


இதில் உள்ள அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியும் அவசியம். உள்துறை அமைச்சகத்தின் கீழ் துவங்கப்பட்ட 'ஐ4சி' பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இருந்தாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றில் இன்னும் பல அம்சங்களை வலுப்படுத்த வேண்டியுள்ளது.


சைபர் குற்ற உதவி எண் 1930, சைபர் குற்றங்களில் இருந்து மக்களை காப்பதற்கான முக்கிய கருவியாக செயல்பட்டு வருகிறது. 1930 எண்ணில் ஒருவர் அழைத்த உடன் அழைப்பை ஏற்க வேண்டும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் போதிய அளவில் அழைப்பு மேலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement