மாவட்டத்தில் ரூ.5,000 கோடியில் வளர்ச்சி திட்டம் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி பெருமிதம்


கரூர்: ''கடந்த, 5 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.


கரூர் மாநகராட்சி, தோரணக்கல்பட்டி நேரு நகரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை, பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆணைகளை வழங்கி, கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி பேசியதாவது: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தோரணக்கல்பட்டி நேரு நகர் பகுதியில், 55.50 கோடியில், 640 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் மத்திய, மாநில நிதி, பயனாளிகள் பங்குத்தொகை சேர்ந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.



இங்கு, தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்ட, 20 எண்ணிக்கையிலான பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிளாக்கிலும், 32 குடியிருப்புகள் வீதம் மொத்தம், 640 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் பல்நோக்கு அறை, படுக்கையறை, சமையலறை, குளியல் அறை, கழிவறை மற்றும் பால்கனி வசதிகளுடன், 400 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.


இங்கு, குடிநீர் வசதிக்காக மட்டும், 1.43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஆழ்துளை கிணறுகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் மற்றும் மின்மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை கடக்கும் இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு பணிகள் விரைந்து முடிக்கப்படும்.


குடியிருப்போர் வசதிக்காக புதிய அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கடந்த, 5 ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு, 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், அரசு வேளாண் கல்லுாரி கலை கல்லுாரிகள், புதிய பஸ் ஸ்டாண்ட், பாதாள சாக்கடை திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.


கலெக்டர் தங்கவேல், எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கமிஷனர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement