விருதுநகரில் தேர்தலுக்காக அவசர கதியில் அமைக்கும் தரமற்ற ரோடுகள் மக்களின் வரிப்பணம் வீண்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதியில் சட்டசபை தேர்தலுக்காக ரோட்டை தோண்டி முறையாக அமைக்காமல் பழைய ரோட்டிற்கு மேல் அப்படியே புதிதாக தார் ரோடுகளை தரமற்ற முறையில் அவசர கதியில் அமைத்து வருகின்றனர். இதனால் தேர்தல் முடிந்ததும் ரோடுகள் சேதமாகி மக்களின் வரிப்பணம் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் பழைய தார் ரோடுகள் அப்படியே புதிதாக அமைக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் இரவோடு இரவாக பணிகள் தீவிரமாக நடக்கிறது. ஆனால் இப்பணிகள் அனைத்தும் முறையாக நடக்கிறதா என்றால் இல்லை.

பொதுவாக தார் ரோட்டை புதிதாக அமைக்க வேண்டும் என்றால் பழைய தார் ரோட்டை தோண்டி எடுத்து விட்டு, மண், ஜல்லி கற்கள் பரப்பி சமதளப்படுத்திய பின், பழைய ரோட்டின் உயரத்தை விட புதிதாக அமைக்கும் ரோட்டின் உயரம் அதிகரித்து விடாமல் அமைக்க வேண்டும்.

ஆனால் தற்போது நகராட்சியின் வார்டுகளில் நடக்கும் புதிய தார் ரோடு அமைக்கும் பணிகள் அப்படி நடக்கவில்லை. மாறாக பழைய தார் ரோட்டின் மீது அப்படியே இரவோடு இரவாக புதிதாக தார் ரோடு அமைத்து வருகின்றனர். இப்படி தரமற்ற முறையில் தேர்தலுக்காக அவசர கதியில் நடக்கும் பணிகளால் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்து ரோடுகளும் சேதமாகிவிடும். இதனால் மக்களின் வரிப்பணம் மொத்தமும் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.

விருதுநகர் நகராட்சியில் முறையாகவும், தரமற்றதாக அமைக்கப்படும் புதிய தார் ரோடுகளை அகற்றி, முறையாக பணிகளை செய்து புதிதாக தார் ரோடுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement