தமிழக அரசின் 'தோழி' விடுதிகளில் தனியாரை விட கட்டணம் அதிகம்; விடுதியில் தங்கும் பெண்கள் புகார்

சென்னை: தமிழக அரசு துவக்கிய, 'தோழி' விடுதிகளில், தனியார் விடுதிகளை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வசதிகள் குறைவாகவே உள்ளன என, விடுதியில் தங்கும் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


சமூக நலத்துறை சார்பில், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யும் நோக்கில், 'தோழி' விடுதிகள் திட்டம், கடந்த 2023ல் துவக்கப்பட்டது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குறைந்த விலையில், பாதுகாப்பான தங்குமிட வசதியை தருவது, இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், சென்னை உட்பட 16 மாவட்டங்களில் செயல்படும், 19 'தோழி' விடுதிகளில் 1,400க்கும் அதிகமான பெண்கள் தங்கி உள்ளனர்.


மேலும், 200 பெண்கள் தங்கும் வகையில், மதுரை உட்பட நான்கு மாவட்டங்களில், 21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதியை, முதல்வர் ஸ்டாலின் கடந்த 17ம் தேதி திறந்து வைத்தார். இவ்விடுதியில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 'பயோ மெட்ரிக்' கருவியுடன் கூடிய, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


மேலும், தனி நபர், இருவர், நான்கு பேர் மற்றும் ஆறு நபர்கள் தங்கும் அறைகள், இவ்விடுதிகளில் உள்ளன. இந்நிலையில் 'தோழி' விடுதிகள் திட்டத்தின் கீழ், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம், தனியாரை விட அதிகமாக உள்ளது. அரசு வாங்கும் கட்டணத்திற்கு ஏற்ப வசதிகளை இல்லை என, பெண் பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


சென்னையில் செயல்படும் சில விடுதிகளில், 'ஏசி' இல்லாத அறைகளில், ஒருவர் தங்க 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய்; இருவர் தங்கும் அறைக்கு, 5,000 ரூபாய் முதல் 8,800 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


இது குறித்து, 'தோழி' விடுதி பயனாளிகள் சிலர் கூறியதாவது:
சென்னை, பரங்கிமலையில் உள்ள விடுதியில், 150க்கும் அதிகமானோர் தங்கியுள்ளோம். இங்கு, தனிநபர் அறைக்கு மாதம் 10,000 ரூபாய்; இருவர் தங்கும் அறைக்கு 8,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


'ஏசி' என்றால், 10,600 முதல் 12,500 ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது. இந்த கட்டணம் தங்குவதற்கு மட்டுமே. உணவு வழங்குவதில்லை.


கிண்டியில் உள்ள சில தனியார் விடுதியில், இதை விட குறைந்த கட்டணத்தில், மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது. ஆனால், 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, உணவிற்கு தனியாக ஒரு நாளைக்கு 130 ரூபாய் கேட்பது, வேதனையாக உள்ளது. கட்டணத்தை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


@block_B@

சாப்பாடுக்கு ரூ.130!



சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு தோழி விடுதியிலும், கேன்டீன் உள்ளது. தேவைப்படுவோர், தினசரி 130 ரூபாய் செலுத்தி உணவு பெற்றுக் கொள்ளலாம். மேலும், அறைகளில், மின் அடுப்பு உள்ளது. அதை பயன்படுத்தி சமைத்துக் கொள்ளலாம்' என்றனர்.block_B

Advertisement