பழுதடைந்த அம்மா உணவக கட்டடம் சீரமைக்கப்படுமா?

கடலுார்: அம்மா உணவக கட்டடம் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலுாரில் கடந்த, 2015ம் ஆண்டு உழவர் சந்தை அருகில், 41லட்ச ரூபாய் மதிப்பிலும், அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், 38 லட்ச ரூபாய் மதிப்பிலும் அம்மா உணவகங்கள் கட்டி திறக்கப்பட்டன. கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா உணவகங்கள் கடந்த, 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி வீணாகி வருகின்றன.

கடலுார் உழவர் சந்தை அருகிலுள்ள அம்மா உணவகத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளிகள், நடைபாதை வியாபாரிகள், முதியவர்கள் உட்பட ஏராளமானோர் சாப்பிட்டு வந்தனர். ஆனால், தற்போது கட்டடம் முறையான பராமரிப்பின்றி மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளன. உணவகத்திற்காக வழங்கப்பட்ட பொருட்களும் வீணாகி பயன்படுத்த முடியாமல் வைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்த மின்விசிறிகள் மாற்றப்படாமல் உள்ளன.

கை கழுவும் இடம் சுகாதாரமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்களின் வருகை குறைந்துபோய்விட்டது. வருபவர்களும் அச்சத்துடனேயே சாப்பிட்டுவிட்டுச்செல்லும் நிலை உள்ளது.

முன்பு நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இட்லி விற்பனையான நிலையில், தற்போது 700 முதல் 800 இட்லிகள் மட்டுமே விற்பனையாகிறது. இதுகுறித்து கூலித்தொழிலாளி ஒருவர் கூறுகையில், 'நகர பகுதிகளில் கூலித்தொழிலாளிகள், ஏழைகளின் அட்சய பாத்திரமாக விளங்கிய அம்மா உணவகம் இன்று செயல்படாமல் முடங்கிப் போய் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவக கட்டடத்தை சீரமைத்து, ஏற்கனவே இருந்தது போல இயங்கச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

Advertisement