நல்லகண்ணு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
பொதுவாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்திற்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பொது உடைமை இயக்கத்தின் முன்னோடியுமான நல்லக்கண்ணுவின் மறைவுச் செய்தி செய்தியறிந்து ஆறாத் துயரமடைந்தேன். தொழிலாளர் உரிமைகள் ,சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்க்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த போராளி, நல்லக்கண்ணு.
எளிமை, நேர்மை , தியாகம் மற்றும் கொள்கை உறுதி ஆகியவற்றால் அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை. அவரது மறைவு பொதுவாழ்விற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தோழர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
@twitter@https://x.com/VPIndia/status/2026607702634352670 twitter
கவர்னர் ரவி
முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு உணர்வுடன் பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்தார். அவரது மறைவு ஆழமாக உணரப்படும் ஒரு வெற்றிடத்தை விட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி
@twitter@https://x.com/lokbhavan_tn/status/2026609982695739632 twitter
முதல்வர் ஸ்டாலின்
நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! கருணாநிதியுடன் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், கருணாநிதியுடன் தோளோடு தோள் நின்று களமாடியவர்.
பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்!தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!
@twitter@https://x.com/mkstalin/status/2026590609386197387twitter
மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும் தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லகண்ணு காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர் நல்லகண்ணு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@twitter@https://x.com/EPSTamilNadu/status/2026612702307643561twitter
திமுக எம்பி கனிமொழி
விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - தகைசால் தமிழர் நல்லக்கண்ணுவுக்கு செவ்வணக்கம்! தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
@twitter@https://x.com/KanimozhiDMK/status/2026584007266439543twitter
மத்திய அமைச்சர் முருகன்
தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், எளிய மக்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவருமான, தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவு மிகுந்த மன வருத்தமளிக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டார். சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார். தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள அய்யா நல்லகண்ணு அவர்களைப் போற்றுவோம். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.ஓம் சாந்தி!
@twitter@https://x.com/DrLMurugan/status/2026588872851992905 twitter
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!ஓம் சாந்தி!
@twitter@https://x.com/NainarBJP/status/2026591906298474686twitter
ராஜ்யசபா எம்பி கமல்
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.
@twitter@https://x.com/ikamalhaasan/status/2026605339781820524 twitter
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். நல்லகண்ணு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.ஓம் சாந்தி!
@twitter@https://x.com/annamalai_k/status/2026588021261287858 twitter
நடிகர் ரஜினி
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த நல்லகண்ணுவின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
@twitter@https://x.com/rajinikanth/status/2026600317794791527twitter
தவெக தலைவர் விஜய்
சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்லகண்ணு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
@twitter@https://x.com/TVKVijayHQ/status/2026599886532354077twitter
அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் நல்லகண்ணு மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். நல்லகண்ணுவை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@twitter@https://x.com/TTVDhinakaran/status/2026589054977155099twitter
பாமக தலைவர் அன்புமணி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரும், விடுதலைப்போராட்ட வீரருமான நல்லக்கண்ணு முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்கள் எவ்வாறு எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.
@twitter@https://x.com/draramadoss/status/2026601813487808844
twitter
தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. எளிமையும் நேர்மையும் கொண்ட அரசியல் வாழ்வால் மக்கள் மனதில் நிலைத்திருந்த பெருந்தலைவர் அவர். சமூகநீதிக்காக, உழைப்பாளர் உரிமைக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும். அவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@twitter@https://x.com/PremallathaDmdk/status/2026609489093472749twitter
சந்தடிசாக்குல கலைஞரோட களமாடியவர், திராவிடமும், பொதுவுடைமையும் இரட்டைக்குழல் துப்பாக்கி அப்படி இப்படின்னு ஸ்டாலின் கதைவுடுறதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது.. அவரு ஆத்மா சுயநலம் இல்லாத சுகபோக வாழ்க்கைக்கு ஆசைப்படாத ஆத்மா. நிச்சயம் சாந்தியாகும்.. ஆனால் பேராசைகொண்ட சுகபோகவாழ்க்கைக்காக பொதுமக்களைசுரண்டி வாழும் உங்களைப்போன்ற அரசியல்வாதிகளின் ஆத்மா சாந்தியடையாமல் பேயாக பிசாசாக மேலும் ஆசைதீராமல் உலவிக்கொண்டே இருக்கும்.. அதனால் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தையும் ஏழை எளியவர்களுக்கு எழுதிவைத்துவிட்டு எளியவாழ்க்கை வாழுங்கள். மீதி இருக்கும் காலமாவது புண்ணியத்தை தேடி நகரும்.
இதே கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் ப கல்யாணசுந்தரம் கருணாநிதி கழகத்தின் ஊழல்களை பட்டியலிட்டு அளித்த மனுவின் அடிப்படையில்தான் ஆட்சி கலைக்கப்பட்டு சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் அதே திமுக விடம் 10 கோடி கைநீட்டி பெற்றதும் இவர் இருந்த சிபிஐதான். இவர் மவுனம் சாதித்தார். எப்படிதான் இவரை உண்மையான தலைவர் என கூற முடிகிறது? மறப்போம் மன்னிப்போம். நாகரீகம் கருதி இவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தேவையற்ற உண்டியல் ஆணிமேலும்
-
இண்டிகோ விமானம் கிளம்புவதில் தாமதம்; ஏசி கோளாறு: ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம்
-
அனில் அம்பானியின் ரூ.3716 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
-
சைவம், வைணவம் குறித்து ஆபாச பேச்சு; மார்ச் 24ல் பொன்முடி ஆஜராக உத்தரவு
-
பிரேசில் கொட்டி தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி
-
அமெரிக்காவில் இனி சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காது!
-
எங்கும் ஊழல்; எதிலும் ஊழல்: பாகிஸ்தான் ஐகோர்ட்டில் 5 ஆண்டாக பணியாற்றிய போலி நீதிபதி நீக்கம்