கேரளா ரயில்வே ஸ்டேஷனில் பெண் அமைச்சர் மீது தாக்குதல்; இளைஞர் காங். அத்துமீறல்

5

கண்ணூர்: கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தியதில் அமைச்சர் வீணா ஜார்ஜ் காயம் அடைந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

கேரளாவில் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு எதிராக இரிக்கூர், பைய்யாவூர், தலசேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். கேரள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் போது அலட்சியம் காட்டுவதை கண்டித்து இந்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது.

அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அதற்கேற்ப அவரின் பயணத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வந்தே பாரத் ரயிலில் செல்ல ஒன்றாவது நடைமேடையில் வீணா ஜார்ஜ் காத்திருந்தார்.

ரயிலில் ஏற முயன்ற அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞர் காங்கிரசார் கறுப்புக் கொடிகளை பிடித்தபடி எதிர்ப்பு முழக்கமிட்டு அமைச்சரை அணுக எத்தனித்தனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கை கலப்பும் உண்டாக, வீணா ஜார்ஜ் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், அமைச்சர் வீணா ஜார்ஜை போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு,கண்ணூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அமைச்சர் மீதான தாக்குதலை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்தை கண்டித்து உள்ளார். ஒரு பழம்பெரும் கட்சியின் வருந்தத்தக்க அரசியல் நடவடிக்கை, இது மாணவர் அமைப்பினர் போராட்டம் அல்ல, வன்முறையாளர்களின் வெறித்தனம் என்று கூறி உள்ளார்.

Advertisement