சென்னையில் விண்ணைத்தொட்ட இந்தியா * அபிஷேக், பாண்ட்யா, திலக் 'சரவெடி'
சென்னை: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா அரைசதம் விளாச, இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-1) இந்தியா, ஜிம்பாப்வே மோதின. இந்திய அணியில் ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், அக்சர் படேல் வாய்ப்பு பெற்றனர். 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா, 'பவுலிங்' தேர்வு செய்தார்.
26 பந்தில் அரைசதம்
இந்திய அணிக்கு சாம்சன், அபிஷேக் சர்மா அதிரடி துவக்கம் தந்தனர். ரிச்சர்ட் நிகரவா வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் சாம்சன். தொடர்ந்து மபோசா ஓவரில் (3வது) அபிஷேக் (5 வைடு,4,6), சாம்சன் (4) விளாச, மொத்தம் 23 ரன் கிடைத்தன. 3 ஓவரில் 46/0 ரன் எடுக்கப்பட்டன. 4வது ஓவரில், முசரபானி பந்தை துாக்கி அடித்த சாம்சன் (24) அவுட்டானார். பின் அபிஷேக், இஷான் கிஷான் விளாச, பவர் பிளே (முதல் 6 ஓவர்) முடிவில் இந்தியா 80/1 ரன் எடுத்தது. அபிஷேக் சர்மா, 26 பந்தில் அரைசதம் எட்டினார்.
நழுவிய கைகள்
முசேகிவா கைநழுவ 26 ரன்னில் கண்டம் தப்பினார் இஷான். இதை பயன்படுத்திய இவர், சிக்கந்தர் ராசா ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். இஷான், 38 ரன்னுக்கு வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் (8 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' முசரபானி கோட்டைவிட்டார். இதற்கு 'பரிசாக' மபோசா ஓவரில் சூர்யா வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். அபிஷேக் சர்மா, 55 ரன்னுக்கு (30 பந்து, 4x4, 4x6) 'பெவிலியின்' திரும்பினார். சூர்யா 13 பந்தில் 33 ரன் எடுத்தார்.
அதிரடி ஆட்டம்
கடைசி கட்டத்தில் திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்த இவர்களது விண்ணை முட்டும் சிக்சர்கள், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தது. இவான்ஸ் பந்தில் திலக் வர்மா சிக்சர் அடிக்க, இந்தியா 200 ரன்னை எட்டியது. இவான்ஸ் வீசிய கடைசி ஓவரில் வரிசையாக இரு சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 23 பந்தில் அரைசதம் எட்டினார். இந்திய அணி 20 ஓவரில் 256/4 ரன் குவித்தது. பாண்ட்யா (50 ரன், 2X4, 4X6), திலக் வர்மா (44, 16 பந்து, 3X4, 4X6) அவுட்டாகாமல் இருந்தனர்.
பென்னட் ஆறுதல்
கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. மருமாணி (20), கேப்டன் சிக்கந்தர் ராசா (31) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய பிரையன் பென்னட், அரைசதம் கடந்தார். இவர், ஷிவம் துபே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, மொத்தம் 26 ரன் எடுக்கப்பட்டன. ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 184/6 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. சதம் எட்ட தவறிய பென்னட் (97 ரன்*, 59 பந்து, 8x4, 6x6) அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்டநாயகன் விருதை பாண்ட்யா வென்றார்.
கோல்கட்டாவில் 'காலிறுதி'
'சூப்பர்-8' சுற்று 'பிரிவு 1'ல் இதுவரை மோதிய 2 போட்டியிலும் வென்ற தென் ஆப்ரிக்க அணி 4 புள்ளியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
* தலா ஒரு வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் (2), இந்திய (2) அணிகள் அடுத்த இரு இடத்தில் உள்ளன. 2 போட்டியில் தோற்ற ஜிம்பாப்வே அணி வெளியேறியது.
* அடுத்து மார்ச் 1ல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள், கோல்கட்டா ஈடன் கார்டனில் மோதவுள்ளன. காலிறுதி போன்ற இப்போட்டியில் வெல்லும் அணி, 4 புள்ளியுடன் அரையிறுதிக்கு செல்லலாம்.
இது அதிகம்
நேற்று, 256 ரன் குவித்த இந்திய அணி, 'டி-20' உலக கோப்பை அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2007ல் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 218/4 ரன் எடுத்ததே அதிகம்.
* இது, 'டி-20' உலக கோப்பை வரலாற்றில் பதிவான 2வது அதிகபட்ச ஸ்கோர். ஏற்கனவே இலங்கை அணி 260/6 ரன் (எதிர்: கென்யா, 2007, ஜோகனஸ்பர்க்) குவித்திருந்தது.
* தவிர இது, இம்முறை பதிவான அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன், மும்பையில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் (பிப். 23) வெஸ்ட் இண்டீஸ் அணி 254/6 ரன் எடுத்திருந்தது.
* 'டி-20' உலக கோப்பை தொடரின், 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) ஓவரில் இந்தியா 2வது அதிகபட்ச ரன்னை (80/1) நேற்று பதிவு செய்தது.
சூர்யகுமார் '4000'
நேற்று, தனது 9வது ரன்னை எட்டிய இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது 4000 ரன் என்ற மைல்கல்லை அடைந்தார். இதுவரை 148 போட்டியில், 4024 ரன் (டெஸ்டில் 8, ஒருநாள் போட்டியில் 773, சர்வதேச 'டி-20'ல் 3243 ரன்) எடுத்துள்ளார்.
17 சிக்சர்
நேற்று, இந்தியா சார்பில் 17 சிக்சர் பதிவானது. 'டி-20' உலக கோப்பை அரங்கில், ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச சிக்சர் விளாசியது இந்தியா. இதற்கு முன், 2024ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 சிக்சர் அடித்திருந்தது.
31 பந்தில் 84 ரன்
இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா ஜோடி 31 பந்தில் 84 ரன் விளாசியது. இதன் 'ரன் ரேட்' 16.25. இது, 'டி-20' உலக கோப்பை அரங்கில் 2வது சிறந்த 'ரன்-ரேட்'. ஏற்கனவே 2007ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த கென்யாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையில் ஜெயசூர்யா, ஜெயவர்தனா ஜோடி 29 பந்தில், 87 ரன் ('ரன் ரேட்' 18.00) எடுத்திருந்தது.
24 ஆண்டுகளுக்கு பின்
ஜிம்பாப்வே அணி, இந்திய மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச போட்டியில் நேற்று விளையாடியது. கடைசியாக, 2002, மார்ச் 19ல், கவுகாத்தியில் நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்றது.
நிதான அரைசதம்
இந்தியாவின் அபிஷேக் சர்மா, சர்வதேச 'டி-20' அரங்கில் தனது 2வது ஆமைவேக அரைசதத்தை (26 பந்து) பதிவு செய்தார். ஏற்கனவே, 2024ல் ஹராரேயில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்தில் அரைசதம் எட்டினார்.
வெல்லுமா நியூசிலாந்து அணி
கொழும்பு: இலங்கையின் கொழும்புவில் இன்று நடக்கும் 'சூப்பர்-8' சுற்று, பிரிவு 2ல் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து (4 புள்ளி), நியூசிலாந்து (3 புள்ளி, ரன்ரேட் 3.050) அணிகள் மோதுகின்றன.
இதில் நியூசிலாந்து வென்றால் 5 புள்ளியுடன் பட்டியலில் முதலிடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை நியூசிலாந்து அணி தோற்றால், பாகிஸ்தான்-இலங்கை போட்டி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
நாளை பல்லேகெலேயில் நடக்கும் இப்போட்டியில் பாகிஸ்தான் (1 புள்ளி, -0.461) வென்றால் 3 புள்ளி பெறும். இதன் பின் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும். இலங்கை (2 தோல்வி) அணி ஏற்கனவே வெளியேறி விட்டது.
மேலும்
-
ராஜ்தீப் சர்தேசாய் அறிமுகம்
-
பண மூட்டை நீதிபதி விவகாரம்: விசாரணை குழு பதவி காலம் நீட்டிப்பு
-
பிரிட்டன் அரசுக்கு ரூ.35,000 கடன் தந்த இந்தியர் 109 ஆண்டுகளுக்கு பின் திருப்பி கேட்கும் வாரிசுகள்
-
திவாலானது கிழக்கிந்திய கம்பெனி 170 ஆண்டுக்கு பின் மீண்டும் மூடல்
-
மார்க்சிஸ்ட் - - காங்., தொண்டர்கள் மோதல் கேரளாவில் பதற்றம்
-
அனில் அம்பானி மீது சி.பி.ஐ., புதிய வழக்கு