தமிழகத்தில் ஆண்களை விட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகம்; தேர்தல் ஆணையம்

2

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்களை விட 12 லட்சம் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்,' என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; எஸ்ஐஆர் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். சட்டசபை தேர்தலையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து அவர்களது ஆலோசனைகளை கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 89 லட்சம் பெண் வாக்காளர்களும், 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்களை விட 12 லட்சத்து 21 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். திருநங்கைகள் 7,617 பேர் உள்ளனர். 81 வயது முதல் 85 வயதுக்குட்பட்ட முதியவர்கள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,350 பேர் உள்ளனர். , வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட 12.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களும், 20 வயது முதல் 29 வயது வரை உள்ள வாக்காளர்கள் 1.05 கோடி பேரும் உள்ளனர். இந்தத் தேர்தலில் இளைஞர்கள் அதிகம் வாக்களிப்பதில் கவனம் செலுத்தப்படும். இதற்காக, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த 3,060 பிரத்யேக உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படும். கடைசி இரு சுற்றுகள் இருக்கும் போது தபால் வாக்குகள் எண்ணப்படும். பதிவான ஓட்டுகளில் வித்தியாசம் என வேட்பாளரிடம் இருந்து புகார் எழுந்தால் விவிபேட் ஓட்டுகள் எண்ணப்படும். 2 மணிநேரத்திற்கு ஒருமுறை ஓட்டுப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றப்படும்.

தமிழகத்தில் 75, 032 வாக்குச்சாவடிகள் உள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் காஸ்டிங் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் அதிகாரிகள் எந்த அச்சமும் இன்றி சுதந்திரமாக செயல்படலாம். ஜனநாயக திருவிழாவை தமிழக வாக்காளர்கள் கொண்ட வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைத்து செல்வதற்கான இடம் அமைத்துக் கொடுக்கப்படும். இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெறும். தேர்தல் அறிவிப்புக்கு பின்பு, தேர்தல் பார்வையாளர்கள் தமிழகத்திற்கு வருகை புரிவார்கள், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement