'பரிவர்த்தன்' யாத்திரை பா.ஜ.,வுக்கு கை கொடுக்குமா?

1

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை சீரமைக்கவும், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு எதிரான அதிருப்தியை தீவிரப்படுத்தவும், மாநிலம் முழுதும், 'பரிவர்த்தன் யாத்திரை'யை நடத்த எதிர்க்கட்சியான பா.ஜ., முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது.

தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் உள்ள மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.

இந்த முறை எப்படியாவது திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.,வும் பணியாற்றி வருகிறது.

இந்நிலையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை சீரமைக்கவும், ஆளும் திரிணமுல் காங்., அரசுக்கு எதிரான அதிருப்தியை தீவிரப்படுத்தவும், மேற்கு வங்கம் முழுதும், இன்று முதல், 'பரிவர்த்தன்' யாத்திரையை நடத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது.

திரிணமுல் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ராய்டிகி என்ற பகுதியில், இந்த யாத்திரையை பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இன்று துவக்கி வைக்கிறார்.

மொத்தம், 5,000 கி.மீ., துாரம் நடக்கவுள்ள இந்த யாத்திரை மூலம், 1 - 1.5 கோடி மக்களை நேரடியாக சந்திக்க பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

கூச் பெஹார், கிருஷ்ணா நகர், குல்டி, கர்பேட்டா, ராய்டிகி, இஸ்லாம்பூர், ஹாசன், சந்தேஷ்காலி, அம்தா ஆகிய இடங்களில் இருந்து யாத்திரை புறப்படும்.

கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், பா.ஜ., தொண்டர்களிடையே ஏற்பட்ட சோர்வையும், உட்கட்சி பூசலையும் களைய இந்த யாத்திரை ஒரு மருந்தாக இருக்கும் என்றும், கட்சியின் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உதவும் என்றும் அக்கட்சி தலைமை நம்புகிறது.

இது வெறும் ரத யாத்திரையாக இல்லாமல், உள்ளூர் கூட்டங்கள் மற்றும் மக்களின் குறைகளை கேட்டறியும் ஒரு கட்டமைக்கப்பட்ட பிரசாரமாகவும் இருக்கும்.

யாத்திரையின் முடிவில், கொல்கட்டாவில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யாத்திரை பா.ஜ.,வுக்கு கை கொடுக்குமா என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரிய வரும்.

Advertisement