தெப்பத்தேர் திருவிழா: முகூர்த்தக்கால் நடல்

நாமக்கல்: நாமக்கல் நகரின் மத்தியில், ஒரே கல்லில் உருவான மலையின் அடிப்
பகுதியில் கமலாலய குளம் அமைந்துள்ளது. புராண காலத்தில், நாமகிரி லட்சுமி தாயார் இந்த குளத்தின் கரையில் தவம் இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த ஆஞ்சநேயர், தன் கையில் கொண்டுவந்த சாலக்கிராமத்தை தாயார் கையில் கொடுத்துவிட்டு, குளத்தில் தண்ணீர் அருந்த சென்றதாகவும், அப்போது தாயார் அந்த சாலக்கிராமத்தை தரையில் வைத்ததால், அது நாமக்கல் மலையாக உருவெடுத்ததாக வரலாறு கூறுகிறது.


தற்போதும் கமலாலய குளத்தின் அடிப்பகுதியில், ஆஞ்சநேயரின் பாத சுவடுகளை காண முடிகிறது. நாமக்கல் மலைக்கு மேற்கு புறத்தில், மலையை குடைந்து நாமகிரித்தாயார் உடனுறை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் குடைவரை கோவிலாக அமைந்துள்ளது. அதன் எதிரில், மலையையும், தெய்வங்களையும் வணங்கிய நிலையில், ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.



மலையின் கிழக்கு பகுதியில், அரங்கநாயகி தாயார் உடனுறை ரங்கநாதர் கோவில் குடைவரை கோவிலாக அமைந்துள்ளது. இங்கு, கார்க்கோடகன் என்ற பாம்பின் மீது அனந்தசயன நிலையில், ரங்கநாதர் அருள்பாலிக்கிறார். முப்பெரும் தெய்வங்களை கொண்டுள்ள நாமக்கல்லில், வரும், 4ல், கமலாலய குளத்தில் தெப்பத்தேர் திருவிழா நடக்கிறது.


அதையொட்டி, நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அறங்காவலர்கள் குழு தலைவர் நல்லுசாமி தலைமை வகித்தார். தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement