துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து: ஆலை டிரைவர் பலி


ஆத்துார்: ஆத்துார், பாரதியார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ், 40. தனியார் சேகோ ஆலையில் டிரைவராக பணிபுரிந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 37. இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பு கடை வைத்துள்ளார். இவர்கள் நேற்று, வாழப்பாடியில் துக்க நிகழ்ச்சிக்கு செல்ல, 'பேஷன்' பைக்கில் கொத்தாம்பாடி வழியே சென்றனர். ஹெல்மெட் அணியவில்லை. காலை, 7:40 மணிக்கு, அழகாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து, சேலம் நோக்கி அதிவேகத்தில் வந்த, 'போர்டு - எக்கோஸ்போர்ட்' கார், பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின் பகுதி, பாதி அளவில், காரில் முன் பகுதிக்குள் புகுந்தது.



வெங்கடேஷ், பாலாஜி துாக்கி வீசப்பட்டனர். அவர்களை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வெங்கடேஷ் உயிரிழந்தார். பாலாஜி முதலுதவிக்கு பின், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார், காரை விட்டு தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.

Advertisement