இட்லி கடைக்காரர் தற்கொலை முயற்சி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டல்?
சேலம்: அடிப்படை வசதி செய்து தராதது குறித்து பேனர் வைத்த விவகாரத்தில், இட்லி கடைக்காரர் வீடு முன் இருந்த தட்டி, கூரை அகற்றப்படவே, அவர் தற்கொலைக்கு முயன்றார். இதற்கு, தி.மு.க., கவுன்சிலரின் கணவர் மிரட்டியதே காரணம் என, அவர் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி, 45வது வார்டு பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்தவர் பாலாஜி, 38. இவர் வீடு முன், இட்லி, பணியார கடை நடத்துகிறார். கடந்த வாரம் இவர், உறவினர்கள், மக்கள் சேர்ந்து, அப்பகுதியில் பேனர் ஒட்டினர்.
அதில், 'சாலை, சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. கழிவுநீர் அடைத்து துர்நாற்றத்துடன் வீடுகளுக்குள் வருகிறது. இதை சரி செய்ய சொல்லி, வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. இதனால், 2026 சட்டசபை தேர்தலில் யாருக்கும் ஓட்டுப்போட விருப்பமில்லை' என கூறப்பட்டிருந்தது.
தொடர்ந்து இரு நாட்களுக்கு முன், பேனர் வைத்திருந்த பாலாஜி வீடு முன், சாக்கடை கால்வாயை வெட்டி, அதன் கழிவை எடுத்து அப்படியே மலை போல் குவித்துள்ளனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு என கூறி, பாலாஜி வீடு முன் இருந்த தட்டி, கூரைகளை அகற்றினர். இதில் டிபன் கடையை திறக்க முடியவில்லை. மனமுடைந்த பாலாஜி, நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், செவ்வாய்ப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதில், 'தி.மு.க., கவுன்சிலர் சுகாசினி, அவரது கணவர் செந்தில் அறிவுறுத்தல்படி, கால்வாய் கழிவு குவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு என கூறி அகற்றப்பட்டது. இட்லி கடை நடத்தக்கூடாது என செந்தில் மிரட்டினார். இதில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன்' என கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
'சம்பந்தம் இல்லை'
கவுன்சிலர் சுகாசினியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: கால்வாயில் கழிவு அடைத்தது குறித்து என்னிடம் தெரிவிக்காமல் தன்னிச்சையாக விளம்பர நோக்கில், தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை கால்வாயை துார்வாரி, கழிவுநீர் தேங்காமல் செல்ல வழி ஏற்படுத்தினர். கால்வாயில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு, ஈரமாக உள்ளதால் காய்ந்து உலர்ந்த பின் அகற்றி விடுவதாக, மக்களிடம் தெரிவித்துவிட்டு வந்தேன். ஆனால் என் கணவர் மிரட்டியதால் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இதில் எனக்கோ, கணவருக்கோ சம்பந்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்