ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி
வாஷிங்டன்: ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் காயமடைந்ததாக பென்டகன் அறிவித்துள்ளது.
அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிடிகொடுக்காத ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, அமெரிக்காவுக்கு ராணுவ தளங்களை வழங்கியதற்காக வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக, ஈரான் தன்னிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவின் போர் விமானம் தாங்கிய கப்பலான ஆபிரகாம் லிங்கன் கப்பலை ஈரான் தாக்கியதாக செய்திகள் வெளியாகின. இதனை அமெரிக்கா மறுத்து உள்ளது.
இந்த நிலையில், ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்; ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் தாங்கிய கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மீது ஈரான் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக, ஆபிரகாம் லிங்கன் கப்பல் தொடர்ந்து போர் விமானங்களை ஏவி வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.