மேற்கு வங்க அரசியல் வரைபடத்தை மாற்றிய எஸ்.ஐ.ஆர்., இறுதி பட்டியல்

2

- நமது சிறப்பு நிருபர் -



மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. அங்கு, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன், 7.6 6 கோடி வாக்காளர்கள் இருந்தனர். பணி முடிவடைந்ததை அடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதில், இடம்பெயர்வு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பதிவு உள்ளிட்ட காரணங்களால், 63 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 7.04 கோடியாக குறைந்துள்ளது. இது தவிர, 'தர்க்க ரீதியான முரண்பாடுகள்' இருப்பதாகக் கூறி, 60 லட்சம் பெயர்களை பட்டியலில் சேர்க்காமல் தேர்தல் கமிஷன் நிறுத்தி வைத்துள்ளது.


இறுதி வாக்காளர் பட்டியல் மேற்கு வங்க அரசியலின் வரைபடத்தையே முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. எல்லை மாவட்டங்கள், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில், எஸ்.ஐ.ஆர்., பணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.


வடக்கு கொல்கட்டாவில் உள்ள ஏழு தொகுதிகளில், 4.07 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன . வடக்கு 24 பர்கானாஸ் - 10 லட்சம்; தெற்கு 24 பர்கானாஸ் - 8 லட்சம்; நாடியா மாவட்டத்தில், 2.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அதிகம் வாழும் மால்டா, முர்ஷிதாபாத் மாவட்டங்களில் முறையே, 2.12 லட்சம் மற்றும் 2.93 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆளும் திரிணமுல் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் இந்த மாவட்டங்களில், பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அக்கட்சியின் ஓட்டு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


பா.ஜ.,வின் முக்கிய ஓட்டு வங்கியாகக் கருதப்படும் தலித் ஹிந்து அகதிகளான மதுவா சமூகத்தினர் வாழும் பகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அந்த சமூகத்தின், 90 சதவீதம் பேர் எஸ்.ஐ.ஆர்., பணியால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 40- - 50 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் இந்த சமூகத்தினர், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, திரிணமுல் காங்., - பா.ஜ., ஆகிய இரு கட்சிகளுக்குமே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement