சாம்சன் விளாசல்... அரையிறுதியில் இந்தியா: வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்


கொல்கட்டா: 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் சஞ்சு சாம்சன் (97*) 'ஸ்பெஷல்' ஆட்டம் கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது.
இந்தியா, இலங்கையில் 10வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'சூப்பர்-8 போட்டியில் (பிரிவு-1) இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் நீக்கப்பட்டு, 'ஸ்பின்னர்' அகில் ஹூசைன் வாய்ப்பு பெற்றார். 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார், 'பவுலிங்' தேர்வு செய்தார்.


நல்ல துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் வலுவான அடித்தளம் அமைத்தனர். முதல் விக்கெட்டுக்கு 53 பந்தில் 68 ரன் சேர்த்தனர். ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஹோப் ஒரு சிக்ர், பவுண்டரி அடித்தார். அர்ஷ்தீப் ஓவரில் (2.2) ஒரு ரன்னுக்காக சேஸ் ஓடினார். மறுமுனையில் ஹோப் தயங்கினார். பந்தை 'பீல்டிங்' செய்த வருண், கீப்பர் இருக்கும் திசையில் 'த்ரோ' செய்திருந்தால், சேஸ் (ஒரு ரன்னில்) ரன் அவுட்டாகியிருப்பார். ஆனால், பவுலர் திசையில் தவறாக 'த்ரோ' செய்ததால், சேஸ் தப்பினார். இதை பயன்படுத்தி 5,6வது பந்தில் 2 பவுண்டரி விளாசினார். பும்ரா ஓவரில் (4.5) சேஸ் (14 ரன்னில்) கொடுத்த 'கேட்ச்சை' அபிஷேக் சர்மா கோட்டைவிட்டார். 'பவர் பிளே' (முதல் 6 ஓவர்) வெஸ்ட் இண்டீஸ் அணி 45/0 ரன் எடுத்தது.

பும்ரா மிரட்டல்: பின் 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே திருப்பம் ஏற்படுத்தினார். இவரது பந்தில் ஹோப் (32) போல்டானார். அடுத்து வந்த ஹெட்மெயர், பாண்ட்யா ஓவரில் சிக்சர் விளாசினார். தொடர்ந்து வருண் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். 11 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 99/1 ரன் எடுத்து வலுவாக இருந்தது. இந்த சமயத்தில், போட்டியின் 12வது ஓவரை வீசிய பும்ரா இரட்டை 'அடி' கொடுத்தார். 3வது பந்து 'ஆபத்தான' ஹெட்மெயர் (27) பேட்டை உரசிச் செல்ல, கீப்பர் சாம்சன் பிடிக்க, அம்பயர் அவுட் கொடுத்தார். 'ரிவியு' செய்தும் பலன் கிடைக்கவில்லை. 5வது பந்தை சேஸ் (40) அடிக்க, சூர்யகுமார் அந்தரத்தில் பறந்து பிடிக்க, பரிதாபமாக வெளியேறினார். 12 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 103/3 என்ற நிலையை எட்டியது. பாண்ட்யா பந்தில் ஷெர்பேன் ரூதர்போர்டு (14) அவுட்டானார்.


அதிரடி ஜோடி: கடைசி கட்டத்தில் ரோவ்மென் பாவெல், ஜேசன் ஹோல்டர் மிரட்டினர். 5வது விக்கெட்டுக்கு 35 பந்தில் 76 ரன் சேர்த்தனர். அர்ஷ்தீப் ஓவரில் (16வது) பாவெல் ஒரு இமாலய சிக்சர் (98 மீ துாரம்) உட்பட வரிசையாக 3 சிக்சர் அடிக்க, மொத்தம் 24 ரன் எடுக்கப்பட்டன. வருண் வீசிய அடுத்த ஓவரில் ஹோல்டர் (6,4) விளாச, 14 ரன் கிடைத்தன. பும்ரா வீசிய கடைசி ஓவரில் ஹோல்டர் ஒரு சிக்சர், பாவெல் ஒரு பவுண்டரி அடிக்க, 14 ரன் எடுக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 195/4 ரன் எடுத்தது. பாவெல் (34 ரன், 3X4, 2X6), ஹோல்டர் (37 ரன், 2X4, 3X6)) அவுட்டாகாமல் இருந்தனர்.


சாம்சன் 'ஸ்பெஷல்': சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் தடுமாறியது. அபிஷேக் சர்மா (10), இஷான் கிஷான் (10) விரைவில் வெளியேறினர். கேப்டன் சூர்யகுமார் (18) நிலைக்கவில்லை. தனிநபராக போராடிய சஞ்சு சாம்சன், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அரைசதம் கடந்து அசத்தினார். இவருக்கு திலக் வர்மா 'கம்பெனி' கொடுத்தார். ஷமர் ஜோசப் ஓவரில் (13வது) சாம்சன் ஒரு பவுண்டரி, திலக் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடிக்க, 17 ரன் கிடைத்தன. திலக் வர்மா 27 ரன் எடுத்தார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் உறுதியாக ஆடிய நம்ம 'சேட்டன்' (அண்ணன்) சாம்சன், இந்திய ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார்.


கடைசி ஓவரில் இந்திய வெற்றிக்கு 7 ரன் தேவைப்பட்டன. ஷெப்பர்டு பந்துவீசினார். முதல் இரு பந்துகளில் வரிசையாக ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய சாம்சன், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 19.2 ஓவரில் 199/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சாம்சன் (97 ரன், 50 பந்து, 12X4, 4X6), ஷிவம் துபே(8) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.



கோலியை முந்தினார் சாம்சன்
'டி-20' உலக கோப்பை அரங்கில், 'சேஸ்' செய்த போட்டியில் அதிக ரன் (97*) குவித்த இந்திய வீரரானார் சஞ்சு சாம்சன். இதற்கு முன், விராத் கோலி இரு முறை (எதிர்: ஆஸி., 2016, மொகாலி, எதிர்: பாக்., 2022, மெல்போர்ன்) 82* ரன் எடுத்திருந்தார்.


* 'டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் சஞ்சு சாம்சன் (97*). முதலிடத்தில் ரெய்னா (101 ரன், எதிர்: தெ.ஆப்., 2010) உள்ளார்.

சிறந்த 'சேஸ்'

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்னை விரட்டிய இந்திய அணி, கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்த 'சேஸ்' வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன், 2022ல் இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 158 ரன்னை 'சேஸ்' செய்தது இந்தியா.
* இது, 'டி-20' உலக கோப்பை அரங்கில் இந்தியாவின் சிறந்த 'சேஸ்' வெற்றியானது.


'பீல்டிங்' மோசம்

இந்திய அணி 3 'கேட்ச்', ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணாக்கியது. வருண் தவறு செய்ய, சேஸ் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். அபிஷேக் சர்மா இரு 'கேட்ச்' (ஹோப், பாவெல்), திலக் வர்மா (ஷெர்பேன் ரூதர்போர்டு) ஒரு 'கேட்ச்' கோட்டைவிட்டனர். தற்போதைய 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி 13 'கேட்ச்' நழுவவிட்டுள்ளது.


150 'சிக்சர்'

'டி-20' அரங்கில் அதிக சிக்சர் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ரோவ்மென் பாவெல்(150 சிக்சர்) முதலிடத்திற்கு முன்னேறினார். அடுத்த இடத்தில் பூரன் (149) உள்ளார்.

ஹெட்மயர் '19'

ஒரு 'டி-20' உலக கோப்பை தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரர் என சாதனை படைத்தார் வெஸ்ட் இண்டீசின் ஹெட்மயர் (19 சிக்சர், 2026). அடுத்த இடங்களில் சாஹிப்ஜதா பர்ஹான் (பாக்., 18 சிக்சர், 2026), பூரன் (வெ.இ., 17 சிக்சர், 2024) உள்ளனர்.

Advertisement