தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பால் காஞ்சிபுரம் அதிகாரிகளுக்கு தலைவலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கீழ்கதிர்பூர், கோனேரிக்குப்பம் கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என கூறி, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடக்கும்போதெல்லாம், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு வருவதும், அவற்றை சமாளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில், இரு வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என கூறி, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் வந்துள்ளன.

சமாதானம்

காஞ்சிபுரம் அருகே உள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி, பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், அரசு அந்த நிலங்கள் அனாதீனம் வகைப்பாட்டில் இருப்பதாக கூறுகிறது. கிராம மக்கள், தங்கள் நிலங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதனால், பல ஆண்டுகளாக பட்டா தொடர்பான பிரச்னை நீடிக்கிறது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலின்போதும், கீழ்கதிர்பூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். பின், சமாதானம் செய்யப்பட்டனர்.

கேள்விக்குறி

இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலை, பட்டா வழங்காத காரணத்தால், புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர். இவர்களிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே, காஞ்சிபுரம் அருகே உள்ள கோனேரிக்குப்பம் ஊராட்சியில், மனமகிழ் மன்றம் என்ற பெயரில், பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், அப்பகுதியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கள் பகுதியில் பார் செயல்பட்டால், தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். 5,000 குடும்பங்கள் அருகே வசிப்பதால் பாதிக்கப் படுவார்கள் என எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் அண்ணா குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், பலரும் நேரில் வந்து மனு அளித்தனர்.

மனு அளித்ததோடு, சட்டசபை தேர்தலை புறக்கணிக்க போவதாக, பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் அதிர்ச்சி

கோரிக்கைகளை நிறைவேற்றாததால், தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் அடுத்தடுத்து வருவதால், அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது.

கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போதும், பரந்துார் ஏர்போர்ட் எல்லைக்குள் வரும் கிராம மக்கள் பலரும் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களே, இம்முறை தேர்தலில் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளனர்.

அவ்வாறான சூழலில், பிற வகையான பிரச்னைகள் வாயிலாக, தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புகள் வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

இதுகுறித்து, தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு என்பது, சட்டம் - ஒழுங்கு பற்றிய பிரச்னையாகும். இந்த விவகாரங்களை, மாவட்ட கலெக்டரும், எஸ்.பி.,யும் சேர்ந்து கவனிப்பார்கள்.

'புறக்கணிப்பு செய் வோரை பேசி சமாதானம் செய்து விடுவார்கள். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்' என்றார்.

Advertisement