கடவூரில் மாசிமக பெருவிழா தேரோட்டம் வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

குளித்தலை:கடவூரில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

குளித்தலை அடுத்த, கடவூரில் பிரசித்திபெற்ற ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் திருக்கல்யாண மஹோத்சவ மாசிமாத பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 22ல் கொடியேற்று விழா நடந்தது. அன்று முதல் தினமும் பல்லாக்கில் ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து, வாணவேடிக்கையுடன் வீதி உலா நடந்து வருகிறது.

இதேபோல் ஒவ்வொரு நாளும் இரவில் அன்ன வாகனம், சிம்ம, ஆஞ்சநேயர், கருடன், ஆதிசேஷன், யானை, குதிரை வாகனம் என்று தனித்தனியாக சிறப்பு அலங்காரங்களில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஹேமாப்த நாயகி சமேத கருணாத்ரி நாதர் சுவாமிகள், பெரிய தேரில் எழுந்தருளினார். கடவூர் ஜமீன்தார் மற்றும் பரம்பரை தர்மகர்த்தா மோகன்குமார் முத்தையா முன்னிலையில், தாரைதப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன், பெரிய தேரில் சுவாமி வீதி உலா வந்து கோவிலில் குடி புகுந்தது. இன்று (4ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

* பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் ஆளவந்தீஸ்வரர் சிவன் மற்றும் ஆரணவல்லி அம்மன் சுவாமி கோவில் உள்ளது. மாசிமகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை ஆளவந்தீஸ்வரர் சிவன், ஆரண
வல்லி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட, திருத்தேரில் திரு வீதி உலாவாக பழையஜெயங்கொண்டம் கடைவீதி வழியாக சென்று, கோவில் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* சின்னதாராபுரம், அகிலாண்டேஸ்வரி முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டத்தில். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அரவக்குறிச்சி அருகே சின்னதாராபுரத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி, முனிமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா விமரிசையாக நடந்தது. கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் வீதி உலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர் ரதத்தில் அகிலாண்டேஸ்வரி மற்றும் முனிமுக்தீஸ்வரர் எழுந்தருள, அக்ரஹாரம், பெருமாள் கோவில் வீதி வழியாக தேர் வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

சின்னதாராபுரம் மற்றும்சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மருத்துவம், தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. ஆறுபடை முருகன் திருக்கோவில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ஹேமலதா, செயல் அலுவலர் ஆறுமுகம், அறநிலையத் துறை அலுவலர்கள், பணியாளர்கள்கலந்து கொண்டனர்.

Advertisement