கனிமவள நிதி ரூ.22 கோடியை ஒதுக்காமல்...  முடக்கம்!ஊராட்சிகளில் திட்டப்பணி முடிப்பதில் சிக்கல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கனிமவளம் எடுப்பதால் பாதிக்கப்படும் ஊராட்சிகளுக்கு தேவையான பணிகளை செய்து கொடுக்க, 22 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்காமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், பல ஊராட்சிகளில் திட்டப் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும் புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்துார் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங் களின் கட்டுப்பாட்டில், 274 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில், நிலத்திற்கடியில் இருந்து பாறைகளை வெடிவைத்து உடைத்து எடுப்பது, ஏரிகளில் கிராவல் மண் அள்ளுவது போன்ற கனிமவள பயன்பாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கிறது.

இந்த குவாரிகளில் கிடைக்கும் வருவாயில், 25 சதவீதம் மாவட்ட நிர்வாகத்திற்கும், மீதம் 75 சதவீதம் கனிம வளத்தால் பாதிக்கப்படும் ஊராட்சிகளுக்கு குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தை நலன், வயது வந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு செலவழிக்கப்படுகிறது.

ஒதுக்கீடு

இதற்காக, ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி வழங்கி, ஊராட்சி தலைவர் வாயிலாக வளர்ச்சி பணி செய்யப்படுகிறது.

அதன்படி, 2023 - 24ம் ஆண்டில், கனிம வளத்தால் பாதிக்கப்பட்ட 48 ஊராட்சிகளுக்கு, 33.40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், 11.30 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, தேவையான பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால் மீதமுள்ள 22.10 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளிக்காமல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.

இதனால், கனிம வளத்தால் பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி அளவிலான தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

கனிம வளத்தால் பாதிக்கப்படும் ஊராட்சி களுக்கு, கான்கிரீட் சாலை, மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சி துறையினரால் நிறைவேற்றப்படும்.

கடந்த நிதி ஆண்டிற்கு பணிகள் தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி அளித்தும், பெரும்பாலான பணிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கவில்லை.

சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், ஊராட்சிகளில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் செய்யக்கூடாது.

அதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். இதனால், எங்களால் எதுவும் செய்ய முடியாது. பாதிப்பு உள்ள ஊராட்சிகளில் தேவையான பணிகளை செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:

மாவட்ட கனிமவள நிதியை, ஊரக வளர்ச்சி துறையின் எளிமைபடுத்தப்பட்ட வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்தபின், புதிய பணிகள் தேர்வு செய்து விரைவில் நிர்வாக அனுமதி அளிக்கப்படும்.

முன்னதாக, 11.30 கோடி ரூபாய்க்கு முந்தைய கலெக்டர் நிர்வாக அனுமதி அளித்துள்ளார். தற்போதைய கலெக்டர்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@ நிர்வாக அனுமதி விபரம் ஒன்றியங்கள் ஊராட்சிகள் மொத்த நிதி நிர்வாக அனுமதி வழங்காத நிதி காஞ்சிபுரம் 4 2.83 2.48 வாலாஜாபாத் 11 5.30 1.78 உத்திரமேரூர் 14 22.52 16.58 ஸ்ரீபெரும்புதுார் 16 1.80 1.25 குன்றத்துார் 3 0.95 0.01 மொத்தம் 48 33.40 22.10block_B

Advertisement