'மீண்டும் மஞ்சப்பை' வெண்டிங் மெஷின்கள் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுமா

விருதுநகர்: தமிழகத்தில் ரூ.10க்கு மஞ்சள் பை தரும் 'மீண்டும் மஞ்சப்பை' வெண்டிங் மெஷின்கள் சென்னையில் வைக்கப்பட்டுள்ளன. இதை விரிவுப்படுத்தி மாவட்டங்கள் தோறும் அமைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

2023ல் தமிழக அரசால் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் பலரால் பாராட்டப்பட்டது. இதன் சிறப்பாக இந்த துணிப்பையை பொது இடங்களில் அரசு அலுவலர்கள் இலவசமாக வழங்கி வந்தனர். நாளடைவில் இப்பணிகள் குறைந்து பிளாஸ்டிக் பயன்பாடு பெருகி விட்டது. 2025 ஆகஸ்ட் மாதம் தலைமை செயலகத்தில் மஞ்சப்பை வெண்டிங் மெஷின் வைக்கப் பட்டது.

இதை மாவட்டங்கள் தோறும் விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வெளிநாடுகளில் இது போன்ற வெண்டிங் மெஷின்களை தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அரசு குத்தகைக்கு வழங்குகிறது.

இதை தமிழக அரசும் செயல்படுத்தலாம். கலெக்டர் அலுவலகம், பஸ் ஸ்டாண்டுகள் என மக்கள் கூடும் இடங்களில் வெண்டிங் மெஷின்களை நிறுவலாம். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைப்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் பயன்பாடு குறையும். ஆனால் அரசு இதற்கு செவி சாய்ப்பதில்லை. நாம் உண்ணும் உணவில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக பல ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

பருவநிலை மாற்றத்திற்கு பிளாஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அரசு மாவட்டங்கள் தோறும் மஞ்சள் பை வெண்டிங் மெஷின்கள் அமைத்து பொதுமக்கள் மத்தியில் துணி பை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement