இஸ்ரேல் பிரதமரை திருப்திப்படுத்த ஈரானுக்கு எதிராகப் போர்; அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

7

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லாத போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? என்று அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்தப் போர் வளைகுடா நாடுகளுக்கும் விரிவடைந்துள்ளது. தொடர்ந்து 5வது நாளாக நீடித்து வருவதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


இதனிடையே, ஈரான் முதலில் தாக்க இருந்த நிலையில், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்கு ஈரான் மீது தாக்குதல் தொடரும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்தப் போரினால், அமெரிக்காவுக்கு 1.18 லட்சம் கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லாத போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? என்று அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்துடன் 2வது நாளாக நடந்த ரகசிய ஆலோசனைக்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
செனட்டர் எலிசபெத் வாரன் கூறியதாவது; ஈரானில் அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கு எந்தத் திட்டமும் இல்லை.


பொய்களின் அடிப்படையில் இந்தப் போர் துவங்கப்பட்டுள்ளது. இந்தப் போரை துவங்குவதற்கான எந்தக் காரணமும் அதிபர் டிரம்பிடம் இல்லை. அதேபோல, போரை நிறுத்துவதற்கான எந்தத் திட்டமும் அவரிடம் இல்லை. உங்களில் பலரைப் போலவே, நானும் மிகவும் கோபமாக இருக்கிறேன். டிரம்ப்பின் செயல்கள் என்னை கோபத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த தேவையில்லாத மோதலில் கொல்லப்பட்டவர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். மேலும், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், என்றார்.


செனட்டர் ஆங்கஸ் கிங் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் விருப்பத்திற்காக அமெரிக்கா போரில் இறங்கியிருப்பது மிகவும் கவலைக்குரியது," என்றார்.


செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல் கூறுகையில், " முன்பை விட இப்போத எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. ஈரானுக்குள் அமெரிக்காவின் தரைப்படையினரை அனுப்பும் சூழலுக்குத் தள்ளப்படலாம் என்று தோன்றுகிறது," எனக் கூறினார்.


அதிபர் டிரம்பின் ஈரான் மீதான இந்தப் போருக்கு எதிராக அமெரிக்க செனட்டில் இன்று வாக்கெடுப்பு நடக்கிறது. இதில், போர் அதிகாரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், இனிவரும் தாக்குதல்களுக்கு பார்லியின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement