இதே நாளில் அன்று

மார்ச் 6: விழுப்புரம் மாவட்டம், வளவனுாரில், தியாகராஜன் என்பவரின் மகனாக, 1978, மார்ச் 24ல் பிறந்தவர் கிஷோர்.

சென்னை, அண்ணா பல்கலையில் படித்த இவர், திரைப்பட தொகுப்பாளர்களான பி.லெனின், வி.டி.விஜயன் ஆகியோரிடம், 70க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில், உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றினார். 2009ல் வெளியான, ஈரம் படத்தின் வாயிலாக படத்தொகுப்பாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து, ஆடுகளம், பயணம், எங்கேயும் எப்போதும், காஞ்சனா, காக்கா முட்டை உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட படங்களை எடிட் செய்தார். ஆடுகளம் திரைப்படத்திற்காக, சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது பெற்றார்.

இயக்குநர் வெற்றி மாறனின், விசாரணை படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்தவர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நினைவு திரும்பாமல், தன் 36வது வயதில், 2015ல் இதே நாளில் காலமானார்.

கிஷோரின் உடல் உறுப்புகளை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, அவரது பெற்றோர் தானமாக வழங்கினர்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement