ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு

ரியாத்: ஈரான் போரில், சவுதி அரேபியாவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் உறுதியளித்துள்ளார்.


அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு எதிராக, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஷெய்பா எண்ணெய் வயல், பிரின்ஸ் சுல்தான் விமான தளம் உட்பட முக்கிய இடங்களை தாக்க ஏவுகணைகள் அனுப்பப்பட்டன. அவற்றை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது.

ஈரானின் தொடர் தாக்குதலால் சவுதி அரேபியா பதற்றத்தில் உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், சவுதி அரேபியா சென்று, இளவரசரும், ராணுவ அமைச்சருமான காலித் பின் சல்மானை சந்தித்துப் பேசினார். அப்போது சவுதி அரேபியாவுக்காக ஈரானைத் தாக்க தயாராக உள்ளதாக அசிம் முனீர் உறுதியளித்தார்.


இரு நாடுகள் இடையே கடந்த ஆண்டு கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தப்படி தேவையான அனைத்து ராணுவ உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு உட்பட்டு சவுதி அரேபியா மீதான ஈரானின் தாக்குதல்களை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் பற்றி இருவரும் விவாதித்தனர். மேலும் ஈரான் விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தன் தவறான கணக்கீட்டை மறந்து அறிவார்ந்து செயல்படவேண்டும் என்றும் அவர்கள் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினர்.

Advertisement