200 கிராம் நகை விற்பதாக அழைத்து வியாபாரியிடம் ரூ.28 லட்சம் வழிப்பறி சேலையூரில் நண்பர்கள் நால்வர் சிக்கினர்

சேலையூர்: சேலையூர் அருகே, 200 கிராம் தங்க நகை வைத்திருப்பதாக, பழைய நகை வியாபாரியை வரவழைத்து, 28 லட்சம் ரூபாயை பறித்து சென்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.

வேளச்சேரி, காந்தி நகர், தேரடி தெருவை சேர்ந்தவர் உத்தம்சந்த், 65. இப்பகுதியில், 40 ஆண்டுகளாக துணிக்கடை நடத்தி வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். பகுதி நேரமாக, பழைய நகைகளை வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, உத்தம்சன்ட் மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னிடம் 200 கிராம் நகை இருப்பதாகவும், அதை வாங்கி கொள்ளு மாறும் கூறியுள்ளார்.

தன்னை தொடர்பு கொள்ள யார் கூறியது என, உத்தம்சந்த் கேட்டதற்கு, எதிர்முனையில் பேசிய நபர், சேலையூரில் உள்ள முத்துாட் பைனான்ஸில், மொபைல் போன் எண்ணை கொடுத்ததாக கூறியுள்ளார்.

அதை நம்பிய உத்தம் சந்த், தன் 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், 28 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, சேலையூர் நோக்கி சென்றார். மேடவாக்கம் அருகே சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் பழுதானது.

அதனால், செம்பாக்கம் முத்துாட் பைனான்ஸில் பணிபுரியும், தன் நண்பர் சதீஷ் என்பவரை வரவைத்து, அவருடன் இருசக்கர வாகனத்தில், சேலையூரை அடுத்த மாடம்பாக்கம் மின் வாரிய அலுவலகம் அருகே சென்றார்.

அங்கு, அடையாளம் தெரியாத நான்கு பேர், உத்தம்சந்திடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பினர். அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

சேலையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின், உத்தம்சந்திற்கு வந்த மொபைல் போன் எண் சிக்னலை ஆய்வு செய்ததில், அது இ.சி.ஆரில் உள்ள 'கிரீன் கோகனட் ரெசார்ட்'டில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அறை எண்: 502ல் இருந்த நான்கு பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், ராபிடோ ஓட்டுநரான, பள்ளிக்கரணையை சேர்ந்த ஜெயகுமார், 25, கார்த்திக், 27, கண்ணகி நகரை சேர்ந்த அற்புதராஜ், 30, சேலையூர், வேங்கைவாசலை சேர்ந்த ரெக்ஸ் ரிக்கி, 24, என்பது தெரிய வந்தது.

பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்த நண்பர்களான இவர்களுக்கு, கடன் தொல்லை அதிக அளவில் இருந்துள்ளது.

அதனால், ஜெயகுமாருக்கு அறிமுகமான உத்தம்சந்திடம் இருந்து பணம் பறிக்க, நான்கு பேரும் திட்டமிட்டுள்ளனர்.

அதன்பின், தன்னிடம் 200 கிராம் தங்க நகை இருப்பதாக, ஜெயகுமார் மூலம் உத்தம்சன்டை வரவைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த சேலையூர் போலீசார், அவர்களிடம் இருந்து, 24.29 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement