முதுமலை வனப்பகுதியில் தொடரும் வறட்சி! வளர்ப்பு யானைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு

கூடலுார்: முதுமலையில் தொடரும் கடும் வறட்சியியால் வளர்ப்பு யானைகள், அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று பசுந்தீவனத்தை எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு அபயாரண்யம் யானைகள் முகாமில், 3 குட்டிகள் உட்பட, 28 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இவைகளுக்கு காலை, மாலை நேரங்களில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

தற்போது, முதுமலையில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை போன்று, மேயச்சலுக்கு செல்லும் வளர்ப்பு யானைகளுக்கும் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், இங்குள்ள பாகன்கள், உதவியாளர்கள் உதவியுடன் ஆற்றோரங்களில் பசுமையாக காணப்படும் ஆலமரம், அரசமரம், கோனி மரங்களில் ஏறி, அதிலிருந்து கிடைக்கும் பசுந்தாவரங்களை வெட்டி வளர்ப்பு யானைகளை கொண்டு முகாமுக்கு எடுத்து வருகின்றனர். வளர்ப்பு யானைகள், தங்களுக்கான உணவான பசுந்தாவரங்களை எடுத்து வரும் காட்சியை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,'வனப்பகுதியில் வறட்சி நீங்கி பசுமைக்கு திரும்பும் வரை, சமவெளி பகுதிகளிலிருந்து சோள தட்டுகள் உள்ளிட்ட உணவு தாவரங்களை கொண்டு வந்து யானைகளுக்கு வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement