'டிஜிட்டல் அரெஸ்ட்' எனக்கூறி ஓய்வு ஆசிரியையிடம் மோசடி

வேலுார்:
ஓய்வு ஆசிரியையிடம், டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை, போலீசார் தேடுகின்றனர்.


வேலுார் மாவட்டம், காட்பாடி, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர், 77 வயது பெண். ஜன., 16ல் இவரது மொபைல் போனில், பேசிய நபர், மும்பை மாநில போலீசிலிருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுக்கு தீவிரவாத செயல்களில் தொடர்பு இருப்பதாக, தங்களின் ஆதார், மொபைல் போன் எண் எங்களுக்கு கிடைத்துள்ளது. உங்களை டிஜிட்டல் கைது செய்கிறோம். உங்கள் உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளனர்.


நம்பியவர், தன் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார். அதைப் பார்த்துவிட்டு, 'உங்களது பணப் பரிவர்த்தனைகளில், சந்தேகங்கள் உள்ளன. பணத்தை நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள். அதை சரிபார்த்துவிட்டு, திருப்பி உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்புகிறோம்' என்றனர். மூதாட்டி, மர்ம நபர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு, 10 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார்.
அதன் பின் மர்ம நபர்களிடமிருந்து, எந்த அழைப்பும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி, வேலுார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement