தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்
கோல்கட்டா: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் உலமாக்களுக்கான நிதி பலன்களை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதனை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 மற்றும் 29ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், பதிவாகும் ஓட்டுகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேற்கு வங்க அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவையில் உள்ள அகவிலைப்படியை இந்த மார்ச் முதல் வழங்க இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த முடிவு ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அர்ச்சகர்கள் மற்றும் மவுலவிகளுக்கான மாதாந்திர கவுரவ ஊதியத்தை 500 ரூபாய் உயர்த்தி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், ரூ.1,500 ஆக இருந்த அவர்களின் கவுரவ ஊதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அர்ச்சகர்கள் மற்றும் மவுலவிகளிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து புதிய விண்ணப்பங்களுக்கும் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்பதால், அதற்கு முன்னதாகவே இந்த அறிவிப்புகளை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் தந்திரம் என்று பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.
இது குறித்து பாஜ தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது; நகைச்சுவையான செயல். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் மம்தா பானர்ஜிக்கு ஊழியர்களும், ஆசிரியர்களும் நினைவுக்கு வருகிறார்களா? பல ஆண்டுகளாக மாநில கஜானாவைச் சுரண்டிவிட்டு, இப்போது கடைசி நிமிடத்தில் மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். ஒரு பைசா கூட உண்மையில் விடுவிக்கப்படாது. இது திரிணாமுல் காங்கிரஸின் வழக்கமான தேர்தல் நாடகம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு தேர்தலில் கைகொடுக்குமா? இல்லையா? என்பது வரும் மே 4ம் தேதி தான் தெரிய வரும்.
தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இனிமேல் தான் இருக்கு நாளொரு மேனியும் பொழுதொரு டிராமா அரங்கேற்றம். யாரெங்கே...தலைகட்டு, கால்கட்டு, வீல்சேர் ரெடிபண்ணு
இப்படி ஏதாவது அறிவித்துதான் பல கட்சிகள் தேர்தலில் வெற்றிபெறமுடியும். நாங்கள் நேர்மையாக, லஞ்சலாவண்யம் இல்லாத ஆட்சி புரிவோம் என்று கூறி ஒரு கட்சியாலும் தேர்தலில் வெற்றிபெறவாய்ப்பில்லை.மேலும்
-
4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
-
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் எப்படி அனுமதித்தது? ஜெய்சங்கர் பேட்டி
-
ரஜினியை தவறாக பேசிய ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும்; நயினார் நாகேந்திரன் கண்டிப்பு
-
கச்சா எண்ணெய் தேவையான அளவு கையிருப்பில் உள்ளது: மத்திய அரசு மீண்டும் உறுதி
-
காபி குடிக்கும் நெதன்யாகு வீடியோ போலி: உண்மையை போட்டுடைத்த க்ரூக்
-
திமுக ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை; முதல்வர் ஸ்டாலின்