முல்லைப்பெரியாறு அணை ஆய்வு கூட்டம்; டில்லியில் நடத்த விவசாயிகள் எதிர்ப்பு
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணைக்காக ஏற்படுத்தப்பட்ட தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான மத்திய கண்காணிப்பு குழுவின் ஆய்வுக்கூட்டம் ஏப்., 6ல் டில்லியில் நடத்த தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணை 2024 அக்., 1 முதல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் பிஸ்வநாத் சின்ஹா, கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் பிரியேஸ், தொழில்நுட்ப வல்லுநர்கள் ராகேஷ், ஆனந்த் ராமசாமி ஆகியோர் உள்ளனர்.
இக்குழுவினர் 2025 மார்ச் 22 ல் முதன்முறையாகவும், நவ., 10ல் இரண்டாவது முறையாகவும் அணைப்பகுதியிலேயே ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வுக்கு பின் தேக்கடியில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடக்கும். அங்கு எடுக்கப்படும் முடிவுகளின்படி அணைப்பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் இரு மாநிலங்களுக்கு இடையே அணைப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
ஆனால் 2025 நவ., 10ல் ஆய்வை முடித்த இக்குழு முதன் முறையாக மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் ஆய்வு கூட்டத்தை நடத்தியது. அப்போதே இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இக்குழு அணைப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொள்ளாமல், ஆய்வுக் கூட்டத்தை டில்லியில் ஏப்., 6ல் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: இக்குழு உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளுக்காக ஆய்வு மேற்கொள்ளவில்லை. அணைப்பகுதியில் நடக்கவுள்ள பராமரிப்பு பணிகளுக்காக மட்டுமே ஆய்வு மேற்கொள்கிறது. அதனால் இவர்கள் நடத்தும் ஆய்வு வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை அணைப்பகுதியில் நடக்கும் இந்த ஆய்விற்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு அதிகாரிகள் மட்டும் அணைப் பகுதிக்கு செல்கின்றனர். இது அணையில் உள்ள உண்மைத்தன்மையை மறைக்கும் விதம் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஆய்வுக் கூட்டத்தையே டில்லியில் நடத்துவது அணையின் தமிழகத்திற்கான உரிமை மேலும் பறிபோகும் அபாயம் உள்ளது. இதை அணைப்பகுதியில் உள்ள தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறுவதில்லை என்றனர்.
மேலும்
-
சிறப்பு பள்ளியில் சான்றிதழ் வழங்கல்
-
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்
-
சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
-
கார் மோதி மூதாட்டி பலி
-
பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
-
கிரைம் செய்திகள்...