தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்

கடலுார்: தேர்தல் தொடர்பான புகார்களை வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிவித்தால், 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வந்தது. தேர்தல் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0037, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1950, 04142 - 290119 மற்றும் 8248774852 வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். புகார் வந்த 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

சி - விஜில் மொபைல்ஆப் மூலம் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம். அதுபோல், ஷக்சம் செயலி மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளுக்கு முன்பதிவு செய்யலாம். வாக்காளர்கள் (https://voters.eci.gov.in/) என்ற இணையதள முகவரி மூலம் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம். புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்கள் செய்யலாம்.

கடலுார் மாவட்டத்தில் நகரபகுதிகளில் 734, ஊரகப்பகுதிகளில் 1,856 என மொத்தம் 2,590 ஓட்டுச்சாவடி உள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடியிலும் சி.சி.டி.வி., கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது. முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படும் 9 ஓட்டுச்சாவடிகளும், முழுவதும் மாற்றுத்திறனாளிகளால் நிர்வகிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி உள்ளது.

பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணம் வழங்குவதை தடுக்க 24 மணி நேரமும் பணியில் இருப்பர். தேர்தல் பணிகள் மேற்கொள்ள 17,087அலுவலர்கள், 3,608 போலீசார் உட்பட 20,695க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

மாநில எல்லையில் 6 சோதனை சாவடியிலும், மாவட்ட எல்லையில் உள்ள 10 சோதனைச் சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தி கண்காணிக்கப்படுகிறது என கூறினார்.

டி.ஆர்.ஓ., புண்ணிய கோட்டி, நேர்முக உதவியாளர்கள் செல்வன், திருநாவுக்கரசு, பி.ஆர்.ஓ., நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement